கல்விக் கடன் வட்டியை குறைக்க திட்டம்

திங்கள், 27 ஏப்ரல் 2009 (15:05 IST)
மும்பை: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பீ.ஐ), கல்வி கடனுக்கான வட்டி வகிதத்தை கால் விழுக்காடு குறைக்க திட்டமிட்டுள்ளது.

உயர் கல்வி
பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில், பாரத ஸ்டேட் வங்கி கல்வி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. மாணவிகளுக்கு வழங்கும் கல்வி கடனுக்கான வட்டி 0.50 விழுக்காடு வரை குறைக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்த புதிய வட்டி விகிதம் மே 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30-ந் தேதி வரை வாங்கும் கல்வி கடனுக்கு பொருந்தும். அமலில் இருக்கும்.

தற்போது பாரத ஸ்டேட் வங்கி, 11.75 விழுக்காடு முதல் 13.25 விழுக்காடு என்ற வட்டி விகிதத்தில் கல்விக் கடன் வழங்கி வருகிறது. இதில் ரூ.4 லட்சம் வரையிலான கல்வி கடனுக்கு சொத்துக்கள் எதையும் பிணையமாக வைக்கத் தேவையில்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரையிலான கடனுக்கு மூன்றாம் நபர் ஒருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும். ரூ.7.50 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையான கல்வி கடனுக்கு வீடு அல்லது நிலத்தை பிணையமாக வைக்க வேண்டும். ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் கடனை திரும்ப செலுத்த வேண்டும்.

பாரத ஸ்டேட் வங்கி தற்போது உள்நாட்டில் கல்வி பயில ரூ.10 லட்சம் வரையிலும், அயல்நாடுகளில் கல்வி பயில ரூ.20 லட்சம் வரையிலும் கடன் வழங்குகிறது.

இந்த வங்கி சென்ற ஓர் ஆண்டில் ரூ.6,600 கோடி கல்வி கடன் வழங்கி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 50 விழுக்காடு கூடுதலாகும்.

பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து மற்ற வங்கிகளும் கடனுக்கான வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்