ஒரு பல்கலை.‌‌யி‌ல் சே‌‌ர்‌ந்தாலு‌ம், ம‌ற்றொரு ப‌ல்கலை‌யி‌ல் தொடரலா‌ம்

செவ்வாய், 24 மார்ச் 2009 (12:28 IST)
ஒரு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் சேர்ந்து படித்து விட்டு, வேறு பல்கலைக்கழகங்களில் அந்தப் படிப்பை தொட‌ர்‌ந்து முடிக்கும் வசதியை அமல்படுத்த பல்கலைக்கழக மானியக்குழு (யு.சி.ஜி.) உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் உள்ள மத்திய, மாநில மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கான கல்வி சீர்திருத்தங்களை பல்கலைக்கழக மானியக்குழு (யு.சி.ஜி.) வகுத்துள்ளது. இந்த கல்வி சீர்திருத்தங்களை மேற்கண்ட பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதில், ஒரு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியில் சேர்ந்து குறிப்பிட்ட காலம் படித்து விட்டு, இடமா‌ற்ற‌ம் அ‌ல்லது ப‌ணி மா‌ற்ற‌ம் காரணமாக மீதி படிப்பை வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்து படிக்கும் வசதியை அமல்படுத்துமாறு மேற்கண்ட பல்கலைக்கழகங்களுக்கு யு.சி.ஜி. உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஏற்ப, பல்கலைக்கழகங்களுக்கிடையே மாணவர்கள் இடம் மாறும் வசதியை அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும் தேர்வு நடத்தும் முறை அமலில் உள்ளது. இந்த முறையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக யு.சி.ஜி. கூறியுள்ளது. எனவே, செமஸ்டர் முறையை அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. செமஸ்டர் முறையால், வேகமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படும் என்று யு.சி.ஜி. கூறியுள்ளது. செமஸ்டர் முறையை கட்டாயமாக அமல்படுத்துவதற்கு இதுவே தக்க தருணம் என்றும் அது கூறியுள்ளது.

பிஎச்.டி., எம்.பில்., முதுகலை பட்ட படிப்புகள், இளங்கலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகள் ஆகிய அனைத்தையும் 3 ஆண்டுகளுக்கு ஒருதடவை முற்றிலும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் யு.சி.ஜி. கூறியுள்ளது.

இந்த சீர்திருத்தங்களை விளக்கி, அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் யு.சி.ஜி. தலைவர் பேராசிரியர் சுகதியோ தோரட் கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்த சீர்திருத்தங்களை அமல்படுத்தாவிட்டால், மானிய உதவி குறைக்கப்படும் என்று‌ம் எச்சரித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்