எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வுகள்: `தக்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

சனி, 28 பிப்ரவரி 2009 (10:55 IST)
எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிக் தேர்வுகள் 'தக்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் எ‌ன்று த‌மிழக அரசு தே‌ர்வு‌த்துறை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு தே‌ர்வு‌த்துறை வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌‌ல், எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகின்றன. இந்த தேர்வுகளுக்கு ஏற்கனவே விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள் தற்போது `தக்கல்' திட்டம் என்ற உடனடி அனுமதி திட்டத்தின்கீழ் மார்ச் 5ஆ‌ம் தேதி முதல் 12ஆ‌ம் தேதி வரை (விடுமுறை நாட்கள் நீங்கலாக) விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் ஆகிய இடங்களில் தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் மாதம் 12ஆ‌ம் தேதிக்குள் அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும். தக்கல் திட்டத்தில் விண்ணப்பிப்பவர்கள் சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, கோவை, மதுரை, நெல்லை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்