மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு துவக்கம்

திங்கள், 6 ஜூலை 2009 (12:59 IST)
அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கல‌ந்தா‌ய்வு சென்னையில் இன்று துவங்கியது. மொத்தமுள்ள 1,483 இடங்களுக்கு 14,321 மாணவர்கள் போட்டிபோடு‌கி‌ன்றன‌ர்.

தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிக‌ளி‌ல் 1,483 இடங்கள் உள்ளன. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் பெருந்துறை ஐ.ஆர்.டி, கோவை பி.எஸ்.ஜி கல்லூரி, குலசேகரம் மூகாம்பிகை கல்லூரி, மேல்மருவத்தூர் கல்லூரி ஆகியவற்றில் 251 இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர 14 ஆயிரத்து 321 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 6,064 மாணவர்கள், 8,873 மாணவிகள் தகுதி உள்ளவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஓ.சி பிரிவில் 791, பி.சி பிரிவில் 5,606, பி.சி முஸ்லிம் பிரிவில் 755, எம்.பி.சி பிரிவில் 2,846, எஸ்.சி பிரிவில் 3,439, எஸ்.சி (அருந்ததியர்) பிரிவில் 380, எஸ்.டி பிரிவில் 120 பேரும் அடங்குவர். இவர்களுக்கான கல‌ந்தா‌ய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் இன்று துவங்கியது.

முதல் நாளான இன்று, முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், ஊனமுற்றோர், விளையாட்டு வீரர்களுக்கான சேர்க்கை உத்தரவு வழங்கப்படும். மேலும், மருத்துவப் படிப்பு தரவரிசையின்படி முதல் 10 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சேர்க்கை உத்தரவுகள் வழங்கப்படுகின்றன.

நாளை முதல் 17ஆம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான கல‌ந்தா‌ய்வு நடக்க உள்ளது. கல‌ந்தா‌ய்‌வில் தினமும் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொள்வர். சென்னை மருத்துவக் கல்வி இயக்ககத்தில் ஆண்டுதோறும் கல‌ந்தா‌ய்வு நடக்கும். ஆனால் அங்கு ஏற்படும் இட நெருக்கடியை தவிர்க்க இந்தாண்டு முதல் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கல‌ந்தா‌ய்வு நடத்த மருத்துவக் கல்வி இயக்ககம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்