தர்மபுரி மருத்துவ கல்லூரி‌யி‌ல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி: 25இல் கல‌ந்தா‌ய்வு

சனி, 19 செப்டம்பர் 2009 (14:45 IST)
தர்மபுரி மருத்துவ கல்லூரிக்கு இந்த கல்வி ஆண்டுக்கு மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து வரும் 25ஆ‌ம் தேதி சென்னையில் கல‌ந்தா‌ய்வு நடைபெ‌று‌கிறது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு தர்மபுரியில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து ஒரு வருட படிப்பையும் மாணவர்கள் முடித்து விட்டனர். அவர்களுக்கு 2ஆம் ஆண்டு வகுப்புகள் நடந்து வருகிறது.

ஒவ்வொரு புதிய மருத்துவக் கல்லூரிக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இந்திய மருத்துவக்குழு ஆண்டுதோறும் ஆய்வு செய்து அந்தந்த ஆண்டுகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி வழங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு முதற்கட்ட கல‌ந்தா‌ய்வு நடந்த போது தர்மபுரி மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி தரவில்லை. எப்படியும் 2வது கட்ட கல‌ந்தா‌வி‌ற்குள் அனுமதி கிடைத்துவிடும் என்று த‌மிழக அரசு இரு‌ந்தது.

இதற்கிடையே தர்மபுரி மருத்துவ கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழங்கும்படி இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிடக் கோரி உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்தி‌ல் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.

இதையடுத்து தர்மபுரி மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி மருத்துவ கவுன்சிலுக்கு கடந்த மாதம் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது அனுப்பியது. இதைத்தொடர்ந்து இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் தர்மபுரி கல்லூரியில் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி சதாசிவம் அடங்கிய அமர்வு முன்பு இ‌ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அசோக் தேசாய், போதுமான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டதால் தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கும்படி வாதிட்டார்.

இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆஜரான வழ‌க்க‌றிஞ‌ர் மணீந்தர்சிங், மருத்துவ கல்லூரியில் தங்கள் குழுவினர் ஏற்கனவே நடத்திய ஆய்வு திருப்திகரமாக உள்ளதாக குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மருத்துவ கவுன்சிலின் ஆய்வறிக்கையை உடனடியாக மத்திய அரசிடம் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை தொடருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உய‌ர் ‌நீ‌திம‌ன்ற உத்தரவை தொடர்ந்து தர்மபுரி மருத்துவக்கல்லூரிக்கு இந்த வருட மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி விட்டதாக தெரியவந்துள்ளது.

தர்மபுரி மருத்துவ கல்லூரிக்கு 85 இடங்களுக்கும், ஏற்கனவே உள்ள 14 இடங்களுக்கும் கற்பகவிநாயகா மருத்துவக்கல்லூரியில் உள்ள 65 இடங்களுக்கும் வருகிற 25ஆ‌ம் தேதி கல‌ந்தா‌ய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான கடிதம் மாணவர்களுக்கு அனுப்பப்படு‌கிறது.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரு‌ம் 21ஆ‌ம் தே‌தி வெளியிடப்பட உள்ளது. கல‌ந்தா‌‌ய்வு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி கலை அரங்கில் நடைபெறு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்