தமிழகம், புதுச்சேரியில் புதிதாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளி துவக்க தற்காலிகத் தடை: NCTE

திங்கள், 10 ஆகஸ்ட் 2009 (17:51 IST)
வரும் கல்வியாண்டு முதல் தமிழகம், புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் புதிதாக ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் துவங்கக் கூடாது என ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய ஆணையம் (NCTE) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி படிப்பை முடித்தவர்களுக்கு தற்போது நிலவும் குறைந்தளவு வேலை வாய்ப்பைக் கருத்தில் கொண்டும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஆசிரியர் பயிற்சிக்கான தேசிய ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அதிகரித்து வரும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் கல்வியாண்டு (2010-2011) முதல் ஆந்திரா, கேரளா, உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா, தமிழகம், புதுச்சேரி, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல், மராட்டியம் ஆகிய 13 மாநிலங்களில் B.Ed., D.Ed., உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பயிற்சி படிப்புகளுக்கு புதிதாக பள்ளிகள், கல்லூரிகள் துவக்கக் கூடாது.

மேலும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் புதிய ஆசிரியர் பயிற்சி பள்ளி துவக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. இந்த விதிமுறை சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது எனவும் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்