சிறுவர்களுக்கான இலவச, கட்டாயக் கல்வி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

செவ்வாய், 21 ஜூலை 2009 (10:21 IST)
சிறுவர்களுக்கான இலவச, கட்டாயக் கல்வி மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேறிய சமயத்தில் அவையில் 54 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிறுவர், சிறுமிகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மசோதாவின்படி அனைத்து பள்ளிக் கூடங்களிலும் நலிவடைந்தோரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியர் சேர்ந்து படிக்கும் வகையில் 25% இடஒதுக்கீட்டுக்கு வகை செய்யப்பட்டிருந்தது.

பள்ளிகளில் கட்டாய நன்கொடை வசூலிப்பதை தடுக்கும் நோக்குடனும் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது. மாநிலங்களவையில் நேற்று நடந்த விவாதத்திற்கு பின் இந்த மசோதா நிறைவேறியது. விவாதத்தின் போது 60 உறுப்பினர்கள் அவையில் இருந்தனர். எனினும் மசோதா நிறைவேற்றப்பட்ட போது 54 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர்.

விவாதத்தின் போது சில உறுப்பினர்கள் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு மத்திய அரசிடம் போதிய நிதி இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், இத்திட்டத்திற்கான செலவீனம் மத்திய நிதிக் கமிஷனிடம் கேட்டு பெறப்படும்.

நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேறிவிட்டால் 6 முதல் 14 வயதுக்கு வரையிலான சிறுவர், சிறுமியருக்கு இலவசமாகவும், கட்டாயமாகவும் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமையாகிவிடும். தவிர அவர்களுக்கு தரமான, திருப்திகரமான, சமத்துவமான கல்வி கிடைக்கும். இத்திட்டம் மிகவும் சிக்கல் நிறைந்தது என்றாலும் இதை நாங்கள் நிறைவேற்றியே தீருவோம் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்