கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: கபில் சிபல் தகவல்

வெள்ளி, 26 ஜூன் 2009 (17:45 IST)
நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கிடைக்கும் வகையில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

கல்விக்கான 100 நாள் திட்டத்தை புதுடெல்லியில் நேற்று வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஒரே பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் ஒரே தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள பள்ளி பொதுத்தேர்வு முறைகள் மாணவர்களை சிரமப்படுத்துவதாக உள்ளது. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரையும் மிகவும் கவலை அடையச் செய்கிறது.

எனவே விரும்பும் மாணவர்களுக்கு மட்டுமே 10-ம் வகுப்பு தேர்வு என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு பரிசீலித்து வருகிறது. ப்ரீ யூனிவர்சிட்டி கோர்ஸில் (பல்கலைக்கழக படிப்புக்கு முந்தைய படிப்பு) சேர விரும்பும் மாணவர்கள் மட்டும் 10ஆம் வகுப்பு தேர்வு எழுத வேண்டும்.

அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதத் தேவையில்லை. அதே பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மேல் வகுப்புக்குச் செல்லும் தகுதி பள்ளியில் நடத்தப்படும் தேர்வு அடிப்படையில் முடிவு செய்வது போதுமானது.

அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வி கிடைக்கும் வகையில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமையாக்கப்படும். இதற்கான மசோதா பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும்.

இதேபோல் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக சுயஅதிகாரம் கொண்ட தேசிய ஆணையம் ஏற்படுத்தப்படும். யஷ்பால் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஆணையம் அமைக்கப்படும் என அமைச்சர் கபில் சிபல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்