கட்டாயக்கல்வி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

புதன், 5 ஆகஸ்ட் 2009 (12:34 IST)
நாடு முழுவதும் உள்ள 6 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டமசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

உடல் ஊனமுற்றோருக்கு 18 வயது வரை இலவச கல்வியை இந்த மசோதா உறுதி செய்கிறது. அதே போல் பின்தங்கிய பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு செய்யவும் இந்த மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கட்டாய நன்கொடை பெறுவதையும், குழந்தைகள், பெற்றோருக்கு நேர்முகத் தேர்வு நடத்துவதற்கும் இந்த மசோதா தடைவிதிக்கிறது.

இந்த மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், உடல் ஊனமுற்றோருக்காக சிறப்புப் பள்ளிகள் அமைக்கப்படும். எல்லா வகையான பள்ளிகளிலும் உடல் ஊனமுற்றோருக்கு கல்வி அளிப்பதற்கு அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.

பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்களை அரசால் எதுவும் செய்ய முடியாது. பெற்றோர்களை சிறைக்கு அனுப்பி, குழந்தைகளை ஆதரவற்றோர் நிலைக்குத் தள்ள அரசு விரும்பவில்லை என்றார்.

இந்த மசோதா ஏற்கெனவே மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்