இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளில் அறிவுசார் சமுதாயமாக மாற்றுவதே இலக்கு: ப.சிதம்பரம்

திங்கள், 31 ஆகஸ்ட் 2009 (18:18 IST)
மாணவர்களுக்கு வட்டியில்லாக் கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரத்தில் இத்திட்டத்தைத் துவக்கி வைத்துப் பேசிய அமைச்சர் ப.சிதம்பரம், வட்டியில்லாக் கல்விக் கடன் திட்டத்தின் கீழ் வங்கிகளால் மாணவர்களுக்கு வழங்கப்படும் தொகைக்கு, கல்வி கற்கும் காலத்திற்கு மட்டும் வட்டி வசூலிக்கப்படாது. இது குறைந்தபட்சம் 4 ஆண்டுக்கு பொருந்தும்.

இந்தக் 4 ஆண்டு காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்கு செலுத்தும். இதேபோல் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கவும், சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை, ஊக்கத் தொகையை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

உயர் கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நாட்டில் மேலும் பல மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப, மேலாண்மை கல்வி நிறுவனங்களை அனைத்து பகுதிகளிலும் நிறுவவும் மத்திய அரசிடம் திட்டம் உள்ளது.

இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளில் அறிவுசார் சமுதாயமாக மாற்றுவதே நமது இலக்கு என்றும் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்