அனைவருக்கும் 18 வயது வரை இலவச கல்வி: மத்திய அரசு திட்டம்

சனி, 1 ஆகஸ்ட் 2009 (10:51 IST)
நாட்டில் உள்ள அனைவருக்கும் 18 வயது வரை இலவச கல்வி வழங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி கற்க உரிமை வழங்கும் சட்டமசோதாவை, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:

6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி கற்க உரிமை வழங்கும் சட்ட மசோதா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் வரலாற்று சிறப்புமிக்க பணியாகும். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பும் இதற்கு அவசியம். மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் மிக அவசியம்.

ஜனநாயக நாட்டில் கல்வி போதிப்பது அரசின் கடமை. இந்த பொறுப்பில் தனியாரும் பங்கேற்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்தபோது கல்வி கற்றவர்கள் விகிதம் 17 சதவீதமாக இருந்தது. அது தற்போது 65 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனினும், இந்த சதவீதம் இன்னும் அதிகரிக்க வேண்டும்.

இந்த சட்ட மசோதாவின் நோக்கம், நாடு முழுவதும் ஒரே சீரான கல்வி பெற வேண்டும் என்பதே. இதனால் அனைத்து தனியார் பள்ளிகளும், அந்த பள்ளிகளுக்கு அருகேயுள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தற்போது 14 வயது வரை கல்வி கற்கும் உரிமை வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதையடுத்து, 18 வயது வரை உள்ளவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என கபில்சிபல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்