அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிக்க கபில் சிபல் வலியுறுத்தல்

திங்கள், 24 ஆகஸ்ட் 2009 (17:59 IST)
நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி கற்பிப்பதன் மூலம் தேசிய அளவில் மாணவர்களை ஒருங்கிணைக்க முடியும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல் வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லியில் மேல்நிலைக் கல்வி வாரியங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் கபில் சிபல், நம் நாட்டின் கல்வி முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். பிறருக்கு உதவும் அறிவுசார் விடயங்களை நாம் உருவாக்க வேண்டும்.

தற்போது நாம் அறிவைப் பெறும் நிலையில் இருந்தாலும், எதிர்காலத்தில் அறிவுசார் விடயங்களை உருவாக்கும் நிலைக்கு முன்னேறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவரவர் மாநில மொழியுடன் தேசிய மொழியான ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் மொழிப் பாகுபாடின்றி மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அறிவுசார் விடயங்களை உருவாக்க முடியும்.

தற்போது ஒரு சில மாணவர்கள் தங்களின் தாய்மொழியில் சிறந்த புலமையுடன் விளங்குகின்றனர். அவர்கள் பிற மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என கபில் சிபல் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்