ஆளுநர் பர்னாலா : தீப ஒளி திருநாளாம் தீபா வளி திருநாளில் நம்மிடம் ஒற்றுமை ஓங்கட்டும். இந்த திருநாள் அமைதியையும் வளத்தையும் பெருக்கட்டும். மாநிலத்திலும், நாடு முழுவதும் வளர்ச்சி ஏற்படுத்த வேண்டுகிறேன். இந்த மகிழ்ச்சியான நாளில் தமிழக மக்களுக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா : தித்திக்கும் தீபாவளித் திருநாளை திக்கெட்டும் கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் அகம் மகிழ்கிறேன். தீபாவளி என்பது தீபங்களின் அலங்காரங்களால் எங்கும் ஒளிவிளங்கச் செய்வது. அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞானம் பெற வேண்டும் என்பதுதான் தீபாவளித் திருநாளின் தத்துவம்.
அறியாமை, ஜாதிக் கலவரம், மதக் கலவரம், தேசத் துரோகம் போன்றவற்றை அகற்றி அறிவு, சமத்துவம், சமாதானம், சகோதரத்துவம், தேச பக்தி ஆகியவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் நாள் தான் தீபாவளித் திருநாள். இந்தத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது உள மார்ந்த தீபாவளி நல்வாழ்த் துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி : நாடெங்கும் சமூக விரோதச் செயல்கள் ஒழிந்து, மக்கள் மத்தியில் வறுமை, வன்முறை மறைந்து மதநல்லிணக்கம் மேம்பட்டு மகிழ்ச்சியும், அனைத்துப் பொருளாதார வளர்ச்சியும் காண ஒற்றுமை உணர்வோடு உழைப்போம் என்று உறுதி ஏற்போம். அனைவருக்கும் எனது தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மத்திய மந்திரி ஜி.கே.வாசன் : உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற தீயவைகளை அகற்றி, அமைதியான சூழ்நிலை உருவாக வேண்டும். மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து, மனித நேயம் மலர்ந்து எங்கும் சமத்துவ மணம் வீசிடவும், வளமான தமிழகம், வலிமையான பாரதம் உருவாகவும் தீபஒளி ஏற்றி தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.
தமிழக பாரதிய ஜனதா தலைவர் இல.கணேசன் : நல்லவர்கள் அறத்தின் பக்கம் நிற்பவர்கள், தேசியம் தெய்வீகம் காக்க விரும்புபவர்கள் எதுவும் செய்யாது சும்மா இருந்தாலும் தவறு. நடுநிலை வகித்தாலும் தவறு. ஆர்த்தெழுந்து அறம் காக்க, அதர்மத்தை ஒடுக்க, தேசியம் தெய்வீகம் காக்க ஒன்றுபட்டு அணி திரள்வோம். நிச்சயமாக நமது வாழ்வில் ஒளி பிரகாசிக்கும். அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் : சாதி, மத, இன பேதங்களை கடந்து நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களாலும் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளி. தீமைகளை ஒழித்து நன்மைகளை வளர்ப்பதன் அடையாளம் தான் இந்த விழா. அறியாமை என்னும் இருளை போக்கி, வெளிச்சம் தந்து அனைத்து தரப்பினரின் வாழ்க்கை வளம் பெற, அராஜகத்தை அகற்றி, வன் முறையைப் போக்கி ஜனநாயகம் தழைத்திட, தீப ஒளி ஏற்றி, இந்நன்னாளை தமிழக மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டுமென்று வாழ்த்து கிறேன்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் : தீபாவளி கொண்டாட்டங்களின் போது விபத்துக்கள் நிகழாவண்ணம் எச்சரிக்கையோடும், பாதுகாப்போடும், பட்டாசுகளை வெடித்து இந்நாளை மக்கள் கொண்டாட வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைத்து அனைவருக்கும் என் உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் : இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள தீமைகள் அழிய வேண்டும். மக்களுக்கு நன்மைகள் பெருக வேண்டும். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நினைவுகள் மறைந்து மக்களிடையே சமத்துவம் மலர வேண்டும். இந்நாளில் இறைவன் எல்லோருக்கும் நல்லனவற்றை நல்கிட வேண்டும். நம்நாடு செழித்திட அருள் செய்திட வேண்டுமென்று வேண்டி அனைவருக்கும் புதிய நீதிக்கட்சியின் தீபாவளி தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக முன்னேற்றக் கழக தலைவர் ஜெகத்ரட்சகன் : கலைஞரின் நல்லாட்சியில் தமிழகம் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுகின்றது. நல்லாட்சி மலர்ந்துள்ளது. நன்மைகள் விளைந்துள்ளது நாடும் வீடும் நலம்பெற அறம் தலைநிறுத்துவோம் என்று கூறி இந்த இனிய நன் னாளில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் (பா.ஜ.க.) : தீபாவளித் திருநாள் தீமைகள் அகன்று புதுமையும், நன்மைகளும் உருவாகும் ஒளித் திருநாளாக அனைவராலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஜாதி, மத, மாநில, மொழி வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படும் இத்தீபாவளித் திருநாளில் அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட மனமாற வாழ்த்துகிறேன்.
இதேபோல் தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக தலைவர் மருத்துவர் சேதுராமன், இந்து இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பு செயலாளர் விநாயகர் முரளி, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரிஅருண் உள்பட ஏராளமானோர் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.