தீபாவளி தினத்தில் கிரிக்கெட் : சில நினைவுகள்!

Webdunia

புதன், 7 நவம்பர் 2007 (11:01 IST)
webdunia photoWD
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2வது ஒரு நாள் போட்டி மொஹா‌லி‌யி‌ல் வரும் நவம்பர் 8ம் தேதி, அதாவது தீபாவளிப் பண்டிகையன்று நடைபெறுகிறது.

இதற்கு முன்பும் தீபாவளி தினத்தன்று சில போட்டிகள் நடைபெற்றுள்ளன. சில இனிமையான நினைவுகளும் அந்த போட்டிகள் எழுகின்றன.

1987ம் ஆண்டு இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து முதன் முதலாக உலகக் கோப்பை போட்டிகளை நடத்தின. அக்டோபர் 31ம் தேதி, தீபாவளி தினத்தன்று இந்தியா, நியூசீலாந்து அணியை நாக்பூரில் முக்கியமான போட்டி ஒன்றில் சந்தித்தது.

காலை தீபாவளி வெடிச் சத்தங்கள் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு ஓய்ந்திருந்த நேரம். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அபாரமாக ஆடி வந்த காலம். டாஸ் ஜெயித்து இந்தியா முதலில் பேட் செய்யவேண்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே காத்திருந்தது. நியூசீலாந்து அணித் தலைவர் ஜெஃப் க்ரோவ் டாஸில் வென்று முதலில் பேட் செய்ய தீர்மானித்தார்.

இந்திய பந்து வீச்சு அப்போது சற்று பலமானதாகவே இருந்தது. கேப்டன் கபில்தேவ், சேத்தன் ஷர்மா, மனோஜ் பிராபாகர், மனிந்தர்சிங் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் இருந்தனர்.

நியூசீலாந்து அணியில் மார்டின் க்ரோவ் என்ற பேட்டிங் மேதை இருந்தது இந்திய ரசிகர்களுக்கு அப்போது ஒரு பெரிய கவலை. அவரை வீழ்த்தினால்தான் நியூசீலாந்தை ஒரு குறிப்பிட்ட இலக்கிற்குள் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை.

webdunia photoWD
21 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடி வந்த மார்டின் க்ரோவ் விக்கெட்டை அன்று வீழ்த்தியது யார் என்று தெரிந்தால் ஆச்சர்யம் ஏற்படும். கபில்தேவ் கேப்டனாக இருந்த போது சில புதுமைகளை செய்வார். பந்து வீசமாட்டார் என்று நாம் நினைக்கும் ஒருவரை பந்து வீச அழைப்பார். அன்றும் அப்படித்தான், மொஹமது அசாருதீனை பந்து வீச அழைத்தார் கபில். மார்டின் குரோவ் விக்கெட் கீப்பர் சந்திரகாந்த் பண்டிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அசாருதீன் அன்று 7 ஓவர்கள் வீசி வெறும் 26 ரன்களையே கொடுத்து முக்கிய விக்கெட்டை கைப்பற்றினார் என்பது ஒரு இனிமையான நினைவு.

ஒரு நேரத்தில் நியூசீலாந்து 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் என்று சவாலான இலக்கை நிர்ணயிக்கும் நிலையில்தான் இருந்தனர். அப்போதுதான் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. அதாவது நம் சேத்தன் ஷர்மா நியூசீலாந்து வீரர்கள் கென் ரூதர்ஃபோர்ட், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஸ்மித், இவான் சாட்ஃபீல்ட் ஆகியோர் விக்கெட்டை அடுத்தடுத்து க்ளீன் பவுல்ட் செய்து ஹாட்ரிக் சாதனை புரிந்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் முதன் முதலாக ஹேட்ரிக் சாதனை புரிந்த வீரரானார் சேத்தன் ஷர்மா. நியூசீலாந்து 221 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இந்திய அணி களமிறங்கும்போது மைதானத்திலும் வெளியிலும் பட்டாசு சத்தங்கள் காதை பிளக்க துவங்கின. ஸ்ரீகாந்த், சுனில் கவாஸ்கர் பலத்த கரகோஷத்திற்கிடையே களமிறங்கினர். கவாஸ்கர் ஆடும் கடைசி ஒரு நாள் போட்டி அது. ஒரு நாள் சர்வதேச போட்டியில் எப்படியாவது ஒரு சதம் அடித்து விடவேண்டும் என்ற ஆசையுடன் அவர் களமிறங்கினார்.

அதோடு எப்படியாவது அதிரடி மன்னன் ஸ்ரீகாந்திற்கு முன்னால் அரை சதத்தை எட்டுவது என்ற லட்சியத்தையும் கவாஸ்கர் கொண்டிருந்தார்.

சாட்ஃபீல்ட் அதுவரை இந்த மாதிரியான சுனில் கவாஸ்கரை பார்த்திருக்க மாட்டார். ஸ்ரீகாந்த் மெதுவாக துவங்க கவாஸ்கர் சாட்ஃபீல்ட் பந்துகளை ஆரம்ப கால சச்சின் டெண்டுல்கர் போல் மிட் விக்கெட் திசையில் அடித்து நொறுக்கினார். ஸ்ரீகாந்த் 44 ரன்களில் இருந்த போது கவாஸ்கர் 49 ரன்களில் இருந்தார். ஸ்ரீகாந்திற்கு முன்னால் அரை சதம் எடுத்து விடும் அவரது லட்சியம் நிறைவேறும் தருணம்... மார்டின் ஸ்னீடன் பந்தை ஸ்ரீகாந்த் பவுலர் தலைக்கு நேராக தூக்கி அடிக்க அது சிக்சராக அமைந்தது. 50 ரன்களை எட்டிய ஸ்ரீகாந்த் சிரித்த படியே கவாஸ்கரிடம் வந்து ‘சாரி’ என்பது போல் பாவனை செய்தது இன்றும் நம் நினைவில் உள்ளது.

ஆனால் கவாஸ்கரின் மற்றொரு லட்சியம் நிறைவேறியது 88 பந்துகளில் கவாஸ்கர் 10 பவுண்டரி 3 சிக்சருடன் 103 ரன்களை எடுத்தார். அதுவே ஒரு நாள் கிரிக்கெட்டில் அவரது முதலும் கடைசியுமான சதம். 32 ஓவர்களில் இந்தியா 224 ரன்களை எடுத்து நியூசீலாந்து அணியை உலகக் கோப்பையிலிருந்து வெளியேற்றியது. இந்திய தெருக்கள் எங்கும் உற்சாகமும், வெடிச் சத்தங்களும் நிரம்பி வழிந்தன. தீபாவளியன்று மறக்க முடியாத ஒரு போட்டியாகும் அது.

1989 ஆம் ஆண்டு 6 நாடுகள் பங்கேற்ற நேரு கோப்பை ஒரு நாள் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றன.

அப்போதும் தீபாவளி தினத்தன்று நடந்த ஓரு நாள் போட்டி ஒன்றில் இந்தியா இங்கிலாந்து அணிகள் கான்பூரில் மோதின. சேத்தன் ஷர்மாவிற்கு அதுவும் ஒரு மறக்க முடியாத திபாவளி மற்றும் கிரிக்கெட் தினமாகும். இங்கிலாந்து முதலில் பேட் செய்த போது சேத்தன் ஷர்மா பந்துகளை இங்கிலாந்து வீரர் ஆலன் லாம்ப் வெளுத்து வாங்கிவிட்டார். 10 ஓவர்களில் ஷர்மா 78 ரனகளை கொடுத்து கடும் கோபத்தில் பெவிலியன் சென்றார்.

கொடுத்த ரன்களை ஈடுகட்ட காத்திருந்த சேத்தன் ஷர்மாவிற்கு அப்போதைய கேப்டன் ஸ்ரீகாந்த் ஒரு வாய்ப்பளித்தார். தான் ஆட்டமிழந்து பெவிலியன் செல்லும்போது பெவிலியன் நோக்கி அவர் ஒரு செய்கை செய்தார்... பார்த்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடையுமாறு சேத்தன் ஷர்மாவை களமிறங்கினார். அன்று சேத்தன் ஷர்மா வெறி கொண்டு ஆடினார். அபாரமாக ஆடிய அவர் அன்று 96 பந்துகளில் 8பவுண்டரி ஒரு சிக்சருடன் 101 ரன்களை எடுத்தார். இந்தியாவும் 259 ரன்கள் இலக்கை வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி வாகி சூடியது. சேத்தன் ஷர்மாவுக்கும் தீபாவளி தின போட்டிக்கும் ஏதோ ஒரு புதிரான அதிர்ஷ்டம் இருந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

webdunia photoWD
1991 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியை முதன் முதலில் அழைத்து இந்தியா கவுரப்படுத்திய தொடர். கொல்கத்தாவில் நவம்பர் 10, தீபாவளி தினத்தன்று மற்றுமொரு சுவாரஸ்யமான போட்டி. இதில் சச்சின் டெண்டுல்கர் பலமான தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை மிகத் திறமையுடன் ஆடினார். வெற்றி பெற தேவையான 178 ரன்களை இந்தியா மிகவும் சிரமப்பட்டு எடுத்தது. 20 ரன்களுக்கு 3 விக்கெட்டை டொனால்டிடம் இழந்து இழிவான தோல்விதான், தீபாவளியன்று ஒரு புதிய அணியுடன் தோல்வி... என்றெல்லாம் நினைத்து கொண்டிருந்த போது சச்சின் மற்றும் பிரவீண் ஆம்ரே ஆகியோர் தீபாவளி கொண்டாட்டத்தை வெற்றி மூலம் உற்சாகமூட்டினர்.

1994 ஆம் ஆண்டு தீபாவளி தின கிரிக்கெட் மறக்க வேண்டிய ஒன்று மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக கடைசி 9 ஓவர்களில் 63 ரன்களே தேவை என்று வெற்றி வாய்ப்புகள் இருந்த போது நயன் மோங்கியாவும், மனோஜ் பிராபாகரும் தீபாவளி வெடிகளுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக விளையாடினர்.

தொடர்ந்து மட்டை போட்டு, அந்த 9 ஓவர்களிலும் வெறும் 16 ரன்களையே எடுத்து தோல்வியடையச் செய்தது... கான்பூர் மட்டுமின்றி இந்திய ரசிகர்களாலும் மன்னிக்க முடியாதது. அவர்கள் ஏன் அவ்வாறு அன்று ஆடினார்கள் என்பது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இன்றுமே ஒரு புரியாத புதிர்தான். தீபாவளி தின கொண்டாட்டங்களையே அந்த தோல்வி முடக்கிவிட்டது.

அதேபோல் 2000 ஆம் ஆண்டு தீபாவளி தின கிரிக்கெட் போட்டி மறக்கப்படவேண்டிய ஒன்று. இந்தியாவும் இலங்கை அணியும் ஷார்ஜாவில் அன்றைய தினம் மோதின. இலங்கை அணி 299 ரன்கள் குவித்தது. சரி, இந்திய அணி வெற்றிபெறாவிட்டாலும், ஒரு சவாலை அளிக்கும் என்று எதிர்பார்த்து தொலைக்காட்சி முன்னால் அமர்ந்தால் இந்தியா 54 ரன்களுக்கு சுருண்டது. முரளிதரன் 19 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அது ஒரு மறக்கப்பட வேண்டிய நாளாயிற்று.

இது போன்று தீபாவளி தின கிரிக்கெட் போட்டிகள் கலவையான ஒரு உணர்வுகளை ஏற்படுத்துவதாக இதுவரை அமைந்துள்ளது.

webdunia photoWD
இந்த முறை தீபாவளி தினத்தன்று மொஹா‌லி‌யில் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்...

தீபாவளி ‌சிற‌ப்‌பித‌ழ் முக‌ப்பு!