மூலம் - கலீல் ஜிப்ரான் | தமிழில் - ஐயப்பன் கிருஷ்ணன்
மக்கள் ஃபாதர் சமான் (Father Samaan) சொல்லும் வார்த்தைகளையே வழிகாட்டுதலாகக் கொண்டு இருந்தனர். பாவங்களில் இருந்தும் சாத்தானிடம் இருந்தும் தம்மை விடுவிக்கச் சமானால் மட்டுமே முடியும் என்று நம்பினார்கள். சொர்க்கத்திற்கு செல்லும் இரகசியம் அவருக்கு மட்டுமே தெரியும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால் அவர் சொல்லும் வாசகங்களை, அறிவுரைகளைத் தங்கம், வெள்ளி மற்றும் தங்களின் அறுவடையில் கிடைக்கும் இலாபம் என எதையும் தந்து பெற்றுக்கொள்ளத் தயாராக இருந்தார்கள்.
சாத்தானுக்கு எதிரான போரில் வெல்லும் உத்திகளும் மற்றும் சாத்தானின் வலையில் தாங்கள் விழாமல் இருக்கவும் ஃபாதர் சமானால் மட்டுமே முடியும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தார்கள். அதனால் அந்தச் சுற்று வட்டாரத்தில் ஃபாதர் சமானின் புகழ் பரவியிருந்தது. எங்கும் அவருக்கு மரியாதைகளும் வெகுமதிகளும் வந்து குவிந்தவாறு இருந்தன.
ஒரு நாள் மாலைப் பொழுதில் ஃபாதர் சமான், தன் கடமையைச் செய்ய, மலைக் கிராமம் ஒன்றை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தார். வலியைத் தன்னுள் தேக்கிய தீனமான அழுகுரல் ஒன்று பாதையின் ஓரத்தில் இருந்த கால்வாயில் இருந்து கேட்டதும் ஃபாதர் சமானுக்குத் திக்கென்றது. அருகில் சென்று பார்த்தார்.
ஆடையின்றி ஒரு மனிதன் மிகுந்த வெட்டுக் காயங்களுடன் நிலமெங்கும் இரத்தம் பரவியிருக்க, உதவிக்காகக் கத்தினான்.
"நான் இறந்து கொண்டிருக்கிறேன். என்னைக் காப்பாற்றுங்கள். என் மீது கருணை காட்டுங்கள்" என்று கதறினான்.
"இவன் ஒரு திருடனாய் இருக்க வேண்டும். வழிப்பறி செய்யும் போது யாரோ இவனை அடித்துப் போட்டிருக்க வேண்டும். இவனைக் காப்பாற்றும் முயற்சியில் நான் இறங்கி, இவன் இறந்து போனால், இவனைக் கொன்றதாக என்மேல் குற்றம் சாட்டப்பட்டு நான் தண்டிக்கப்படலாம்".
பிறகு அந்த இடத்தை விட்டு நழுவ முயன்றார்.
"என்னை விட்டுப் போகாதீர்கள். நான் இறந்துகொண்டிருக்கிறேன். காப்பாற்றுங்கள்"
அந்த மனிதனின் அதீதமான தீன ஓலம், ஃபாதரை நிறுத்தியது. தான் உதவ மறுத்ததை எண்ணி, அவரின் முகம் சற்றே வெளுத்துப் போனது. உதடுகள் துடித்தன. ஆனாலும் தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டார்.
"இப்படி ஆபத்தை வரவழைத்துக்கொண்டு அபாயகரமான நிலையில் இருக்கும் இவன் ஒரு பைத்தியக்காரனாகத் தான் இருக்கவேண்டும். இவன் உடம்பில் இருக்கும் காயங்கள் எனக்குப் பயத்தை ஏற்படுத்துகின்றன. கண்டிப்பாக இவன் காயங்கள் என் ஜெபங்களைக் கொண்டோ, மந்திரங்கள் கொண்டோ குணப்படுத்த முடியாத ஒன்று. இவனுக்கு உடல் காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவனே தேவை" என்று தனக்குள் சொல்லிக் கொண்டவாறே சில அடிகள் எடுத்து வைத்தார். ஆனால் அந்த மனிதனின் தீனக் குரலில் வெளிவந்த வார்த்தைகளில் அவர் ஆடிப் போனார்
"ஃபாதர் சமான், போகாதீர்கள், போகாதீர்கள். அருகே வாருங்கள். நான் பைத்தியக்காரனில்லை. நான் திருடனுமில்லை. உங்களின் நெடுநாளைய நண்பன். என்னை இந்த வனாந்தரத்தில் தனிமையில் இறந்து போக விடாதீர்கள். அருகில் வாருங்கள். நான் யார் என்று உங்களுக்குச் சொல்கிறேன்".
அந்த வார்த்தைகள், அவரை அருகே இழுத்துச் சென்றன. அருகில் சென்று உற்றுப் பார்த்தார். புதிய முகம். கள்ளத்தனத்துடன் கூடிய புத்திசாலித்தனம் முகத்தில் பிரதிபலித்தது. அசிங்கமான முகத்தில் இனம் புரியாத அழகும், கொடுமை நிறைந்த முகத்தில் காணும் அமைதியும் அவரைக் குழப்பியது. சட்டென்று ஓரடி பின்வாங்கி பின் கேட்டார்
"யார் நீ"
கிணற்றுக்குள் இருந்து வருவது, போலிருந்தது அவன் குரல்.
"பயப்படாதீர்கள் ஃபாதர். நீங்களும் நானும் நெடுநாளைய நண்பர்கள். நம் நட்பு அசாதாரணமானது. பிரிக்க முடியாததும் கூட. இப்போது நான் நிற்க உதவுங்கள். அருகில் ஏதேனும் நீரோடை இருந்தால் அங்கே அழைத்து சென்று, உங்களின் மேலங்கி கொண்டு எந்தன் காயத்தைச் சுத்தம் செய்யுங்கள்."
"முதலில் நீ யாரென்று சொல். நீ யாரென்றே எனக்குத் தெரியாது. உன்னை நான் பார்த்ததாக நினைவில் இல்லை" ஃபாதர் தள்ளி நின்றவாறே கேட்டார்.
மரணாவஸ்தையுடன் கூடிய வார்த்தையில் அந்த மனிதன் சொன்னான்.
"என்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும். என்னுடைய அடையாளங்கள், உமக்கு பரிச்சயமானவை. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட நூறு முறையாவது என்னைப் பற்றி பேசுகிறீர். ஆயிரம் தடவைக்கு மேல் என்னைப் பார்த்திருக்கிறீர். நான் உங்களுக்கு மிகவும் முக்கியமானவன். உங்களின் வாழ்க்கையையும் விட முக்கியமானவன்"
"இறந்து கொண்டிருக்கும் மனிதன் உண்மையைத் தான் சொல்லவேண்டும். உன்னுடைய கோர முகத்தை என் வாழ்வில் எங்குமே கண்டதில்லை. நீ யாரென்ற உண்மையைச் சொல். அல்லது உன்னை இப்படியே தவிக்க விட்டுவிடுவேன். தப்பிக்க இயலாமல் நீ இறக்க வேண்டியது தான்".
ஆத்திரத்துடன் கூறினார் ஃபாதர் சமான்.
விழுந்து கிடந்த அந்த மனிதன், அலாதியான அமைதியுடன் ஃபாதிரியாரின் முகத்தைப் பார்த்தான். ஆழமான மெல்லிய குரலில் அமைதியுடன் கூறினான்.
"நான் சாத்தான் "
_____ _____ _____
மேலும்
“சாத்தான்“
அந்தப் பயங்கரமான வார்த்தையைக் கேட்டதும், ஃபாதர் சமான் அச்சத்தில் கத்தியது, பக்கத்தில் இருந்த கிராமத்தில் இருந்தவர்களுக்கும் கேட்டிருக்கும். பள்ளத்தாக்குகளில் இருந்தும் அவர் குரல் எதிரொலித்தது. பின்பு சுதாரித்தவாறு அந்த மனிதனைப் பார்த்தார்.
அந்த முகமும் கிராம தேவாலயத்தில் மாட்டி வைத்திருக்கும் சாத்தானின் உருவமும் ஒத்திருந்ததை அவரால் கண்டுகொள்ள முடிந்தது. தடுமாறிய சமான் வாய்விட்டு உரக்கக் கத்தினார்.
”கடவுள் உன் முகத்தை, நரகத்தில் இருக்கும் உன் முகத்தை, மக்கள் உன்னை வெறுப்பதற்காக ஏற்கனவே காட்டிவிட்டார். உனக்குச் சாபத்தில் இருந்து என்றைக்குமே விடுதலை கிடையாது. நோயால் அடிபட்டு இறக்கும் தறுவாயில் இருக்கும் ஆட்டை, அதன் மேய்ப்பாளன் இறக்கத்தான் விடுவானே தவிர, அதைக் காப்பாற்ற மாட்டான். அப்படி காப்பாற்றினால் அது மற்ற ஆடுகளையும் பாழாக்கிவிடும்”.
“நேரம் பறந்துகொண்டிருக்கிறது ஃபாதர். வெறுப்பினால் அர்த்தமற்ற வெறும் பேச்சுகளைப் பேசாதீர்கள். நான் இறக்காமலிருக்க, என்னுடைய காயத்திற்குச் சற்றேனும் மருந்திடுங்கள்”, சாத்தான் மெல்லிய குரலில் கூறினான்.
” தினமும் தேவனைத் தொழுத கைகளினால் நரகத்தின் உற்பத்திப் பொருளான உன்னை நான் தொடமாட்டேன். காலத்தின் நாக்குகளால் சாபமிடப்பட்டவன். நீ மனித குலத்தின் எதிரி. எல்லா நன்மைகளையும் அழிப்பதே உன்னுடைய குறிக்கோள். மனித குல நன்மைக்காக நீ இறந்து பட வேண்டியவன்”.
” இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு இழைக்கப் போகும் தீமையை அறிந்துகொண்டு தான் இதைச் சொல்லுகிறீர்களா ஃபாதர்?” முழங்கையை நிலத்தில் ஊன்றி வேதனையோடு சற்று நகர்ந்தவாறு சாத்தான் கேட்டான்.
“என்ன நடந்ததென்று நான் சொல்லுவதை முழுமையாகக் கேளுங்கள்”
” இன்று பள்ளத்தாக்குகளினூடே நடந்துகொண்டிருக்கும்போது இந்த இடத்தை அடைந்தேன். அப்போது தான் தேவதைகள் என்னைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கின. அவர்களை என்னால் துரத்தி அடித்திருக்க முடியும். அந்தக் கூர்மையான கத்தியைக் கொண்டு அவன் மட்டும் என்னைத் தாக்காமல் இருந்திருந்தால். சக்தி வாய்ந்த அந்த வாளின்முன் என்னால் எதையும் செய்ய முடியவில்லை”
சாத்தான் சற்றே நிறுத்தினான்.
” ஆயுதம் தாங்கிய அந்தப் போர்வீரன், தேவதைகளுள் ஒருவன். மிகச் சிறந்த போராளி, வீரன். அவனுடைய வாள் வீச்சில் இருந்து தப்பிக்கவே இந்த மண்ணில் வீழ்ந்தேன். இல்லையேல் அவன் என்னை அழித்திருப்பான்”
அதிகம் காயமடைந்த பகுதிகளை வேதனையுடன் அசைத்தவாறே சாத்தான் கூறினான்.
வெற்றியும் பெருமிதமும் ஒன்று சேர்ந்த குரலில் ஃபாதர் சொன்னார்
”மனித குலத்தை அழிக்க வந்த மிகப் பெரிய எதிரியிடம் இருந்து மனிதத்தைக் காப்பாற்றிய மைக்கேலின் நாமம் ஆசிர்வதிக்கப்பட்டதாகட்டும்.“
சாத்தானின் முகம் மாறியது..
____ ____ ____
மேலும்
சாத்தான், ஃபாதர் கூறியதை எதிர்த்தான்.
”நீங்கள் என்மீது கொண்டிருக்கும் வெறுப்பைக் காட்டிலும் கொடியதல்ல, நான் மனித குலத்தின் மீது கொண்டிருக்கும் வெறுப்பு. ஃபாதர், உங்கள் உதவிக்கு என்றுமே வந்திராத மைக்கேலை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறீர்கள். உங்களுக்கு என்றும் உதவியாகவும், உங்களின் புகழ் மற்றும் சந்தோஷத்திற்குக் காரணமான என்னை வெறுக்கிறீர்கள். என் தோல்விக்கு மனமகிழ்ந்து, என்மீது சாபமிடுகிறீர்கள். உங்களின் ஆசீர்வாதத்தை என் மேல் வழங்கவும் மறுக்கிறீர்கள். என்னால், என் நிழலால் உயர்ந்த நீங்கள் என்னை ஏன் வெறுக்கிறீர்கள்”
என்னுடைய இருப்பு தான், உங்கள் தொழிலின் வளர்ச்சி. என்னுடைய இருப்பை வைத்துத் தான் மக்களுக்கு என்னிடமிருந்து தப்ப வழி சொல்லுவதாகப் புகழடைகிறீர்கள். பணமும் பெற்றீர்கள். உங்களுக்குத் தேவையான பணம் கிடைத்து விட்டதா ஃபாதர்? அல்லது மேலும் உங்களை நம்பும் மக்களிடம் இருந்து பணமோ, அல்லது தங்கமோ கிடைக்காது என்று முடிவுக்கு வந்ததால், என் மீதான, என் அரசாங்கத்தின் மீதான பயம் மக்களிடம் இருந்து தொலையட்டும் என்று விட்டு விடுகிறீர்களா?“
“நான் இறந்துவிட்டால் வருமானமின்றி வறுமையினால் துயருற்று நீங்கள் இறந்து போவீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா, ஃபாதர்? இத்தனை நாளும் எல்லா இடங்களுக்கும் பயணம் செய்து என்னைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, என்னால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவல்லவா பிரச்சாரம் செய்து வந்தீர்கள்? அவர்கள் உங்களின் அறிவுரையை வாங்கிக்கொண்டு உங்களுக்கு தானியம், தங்கம், வெள்ளி என அனைத்தும் தந்தார்கள். இன்று நான் இறந்துவிட்டால் நாளையில் இருந்து என்ன செய்வீர்கள்?“
“உங்களின் அறக்கட்டளைகளுக்கு எங்கிருந்து பணம் வரும், உங்களுக்கு எங்கிருந்து புகழ் வரும்? உங்களின் தேவாலயம், வீடு எல்லாவற்றையும் விட, உங்களின் இந்த வாழ்க்கை என்னவாகும்?”
சாத்தான் பேசுவதை நிறுத்தினான். இதுவரை அவனிடம் இருந்த பயம் போய், அவனுக்கு ஃபாதர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை வளரத் தொடங்கியது.
”ஃபாதர். நீங்கள் பெருமைசாலி, ஆனால் ஒன்றும் அறியாதவர். உங்களுக்கு நம்பிக்கையின் வரலாற்றை எடுத்துக் கூறுகிறேன் கேளுங்கள். உங்களையும் என்னையும் ஒன்று சேர்த்த அந்த மிகப் பெரிய உண்மையை எடுத்துரைக்கிறேன். கேளுங்கள்”
அந்த வரலாற்றுப் பேருண்மையைச் சாத்தான் மெல்ல கூறத் தொடங்கினான்.
அதில் தான் எத்தனை ஆச்சரியங்கள்…
____ ____ ____
மேலும்
சாத்தான் பேச ஆரம்பித்தான்.
மனிதன் எழுந்து நிற்க ஆரம்பித்த காலம் அது. மனிதன் எழுந்து நின்று தன் கைகளை விரித்து, சூரியனைப் பார்த்தான். முதன் முறையாக அழுதுகொண்டே சொன்னான். அந்த மேகங்களுக்கும் வானத்திற்கும் பின்னே அனைவரையும் காக்கும், அன்பு செலுத்தும் கடவுள் இருக்கிறான்.. பின்னால் திரும்பிப் பார்க்கையில் தன்னுடைய நிழலைக் கண்டு அதிசயித்தான்.. மிரண்டு போனான். தன் காலுக்கடியில் உள்ள இந்தப் பூமியில், மிகக் கொடூரமான அழிவுத் தேவதைகள் இருக்கின்றன. அவை மனித குலத்தின் அழிவையே விரும்புகின்றன என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
தன் குகையை நோக்கி மனிதன் நடந்துகொண்டே தனக்குள் முணுமுணுத்தான்.
”இரண்டு மாபெரும் சக்திகளினூடே நான் மாட்டிக்கொண்டிருக்கிறேன். ஒன்று நான் தஞ்சமடைய வேண்டிய என்னைக் காக்கும் சக்தி. மற்றொன்று நான் விலகி நிற்க வேண்டிய, எப்போதும் எனக்குத் தீமையே இழைக்கும் சக்தி.”
காலம் நகர ஆரம்பித்தது. மனிதன் இரண்டு சக்திகளிடையே வாழ்ந்துகொண்டிருந்தான். ஒன்று ஆசீர்வதிக்கப்பட்ட சக்தி. ஏனென்றால் அது அவனுக்கு சந்தோசத்தைத் தந்தது. மற்றொன்று சபிக்கப்பட்டது. ஏனென்றால் அவனை எப்போதும் அது பயமுறுத்திக்கொண்டே இருந்தது. ஆனால் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டதற்கும் சபிக்கப்பட்டதற்கும் உண்டான அர்த்தத்தை அறிந்துகொள்ளவில்லை.
குளிர் காலத்தில் இலைகளை வீழ்த்தி, குளிரில் நடுங்கியும், வேனிற்காலத்தில் நன்கு பூத்துக் குலுங்கியும் இருக்கும் ஒரு மரத்தினைப் போல இரண்டு சக்திகளிடையே தன் வாழ்வை நகர்த்தினான்.
குடும்பம், நாகரீகம் என மனிதன் கலாச்சார வளர்ச்சி அடைந்த போது, வேலைகளைக் குழுவாகப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள். ஒரு குழு, நிலங்களைச் சீர்ப்படுத்தி வேளாண்மை செய்யவும், மற்றொரு குழு கட்டடங்கள் கட்டவும், ஒரு குழு உணவுகளைக் கொணர்ந்தும் ஆக நாகரீக வளர்ச்சிக்கு ஆட்பட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரு குழு, தேவையே இல்லாத ஆன்மீகத் தொழிலைத் தேர்ந்தெடுத்தது.
சாத்தான் பேசுவதை நிறுத்தினான். பிறகு வெறித்தனமாகச் சிரித்தான். அவனது சிரிப்பு, அந்தப் பள்ளத்தாக்கை உலுக்கியது. இருந்தும் அந்தச் சிரிப்பில் அவனது காயங்களின் வேதனைகள் வெளிப்பட்டன. தன் கையை வேதனையுடன் நகர்த்தி, தன்னைச் சரிப்படுத்திக்கொண்டான்.
”ஆன்மீகம் வித்தியாசமாய் வெகு வேகமாக வளர்ந்தது.“
”முதலில் வந்த ஆதி மனிதக் கூட்டத்தில் ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் லாவிஸ். பெயரின் பூர்வீகம் எனக்குத் தெரியாது. அவன் மிகுந்த புத்திக் கூர்மை உடையவன். ஆனால் மிகப் பெரிய சோம்பேறி.. தன் உடல் வருத்திச் செய்யும் எந்த வேலையிலும் அவனுக்கு விருப்பமில்லை.”
”வேலை செய்யாமல் அப்போது உணவு கிடைப்பதில்லை. ஆதலால் பல நாள்கள் அவன் வெறும் வயிற்றுடன் உறங்க வேண்டியதாயிற்று.”
சாத்தான் தொடர்ந்தான்
“அப்போது தான் எல்லோரையும் பயத்தில் ஆழ்த்திய அந்த நிகழ்ச்சி நடந்தது.“
____ ____ ____
மேலும்
”நல்லதோர் இளவேனிற் கால இரவு நேரம் அது. அந்த ஆதிமக்கள், தலைவனின் கொட்டகைக்கு முன்பாகக் கூடி அன்று நடந்தவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரம், ஒரு மனிதன் எதையோ பார்த்துச் சடேரென காலுதறி எழுந்தான். நிலவினைக் காட்டி அழுதவாறே சொன்னான்.
”அங்கே பாருங்கள் இரவுக் கடவுள் முகம் கருத்துக்கொண்டு வருகிறது. அவனுடைய அழகு மறைந்துகொண்டு வருகிறது. அவன் வெறும் கருங்கல்லாக மாறி, வானத்தில் தொங்குவது போல இருக்கிறான்”
மொத்தக் கூட்டமும் இருளின் கரங்கள் தங்கள் இதயத்தைப் பிடித்துப் பிசைவது போலுணர்ந்து அண்ணாந்து பார்த்துக் கவலையும் பயமும் கொண்ட முகத்துடன் கதற ஆரம்பித்தார்கள். அவர்களின் இரவுக் கடவுள் மெல்ல மெல்ல தன் முகத்தை இழந்துகொண்டிருக்கிறான். அவன் கறுப்புப் பந்தாய் மாறிக்கொண்டிருக்கிறான். அவர்கள் கண் முன்னரே பிரகாசமாய் இருந்த பூமி ஒளி இழந்து மலை, முகடு, பள்ளத்தாக்கு என எல்லாமும் மறைந்து எல்லாம் கருநிறமாய் மாறி, இருட்சீலைக்குப் பின் ஒளிந்தது.
அந்த நேரத்தில் லாவிஸ் எழுந்து பேசத் தொடங்கினான். இவன் இது போன்ற கிரகணத்தை ஏற்கனவே பார்த்திருக்கிறான். அது கொஞ்ச நேரத்தில் சரியாவதையும் கவனித்திருக்கிறான். கூட்டத்தில் அனைவருக்கும் நடுவில் சென்று நின்று கொண்டு,
”எல்லோரும் மண்டியிடுங்கள், இருளின் கொடிய சக்தி நம் இரவுக் கடவுளைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. அந்தத் தீயக் கடவுள், இரவுக் கடவுளை வென்று விட்டால் நாம் அனைவரும் அழிக்கப்படுவோம். அந்தத் தீயக் கடவுள் நம்மையும் இரையாக்கிக் கொள்வான். ஆனால் நம் இரவுக் கடவுள், தீயக் கடவுளை வென்றுவிட்டால் நாம் அனைவரும் பிழைப்போம். பிரார்த்தியுங்கள், இடைவிடாது பிரார்த்தியுங்கள் இரவுக் கடவுளை மனமுருக வணங்குங்கள். உங்கள் முகத்தை பூமியில் பதியுங்கள். நாம் பார்க்கப் பார்க்கத் தீக்கடவுளுக்கு அதிகம் சக்தி வரும். கண்களை மூடிக்கொண்டு தலை நிமிராமல் பிரார்த்தியுங்கள்.
எவனொருவன் நடுவில் இரண்டு கடவுளர்களின் சண்டையைப் பார்க்க முயல்கிறானோ, அவனுக்குக் கண் பார்வை பறிபோகும். கூடவே அவன் பைத்தியமாவான். எனவே தலை குனிந்து பிரார்த்தனையுடன் இதயப் பூர்வமாக இரவுக் கடவுளை வணங்குங்கள். நம் இரவுக் கடவுள், தீய கடவுளை வெல்லுவதற்கான வலிமையைக் கூட்டுங்கள். அந்த இரவுக் கடவுளுக்கு எதிரி நமக்கும் எதிரி”
இப்படியாக லாவிஸ் பேசிக்கொண்டே போனான். யாரும் கேட்டிராத கூடவே புரிந்துகொள்ள முடியாத வகையில் சொற்கூட்டினை உருவாக்கி, அதை உரத்துச் சொல்ல ஆரம்பித்தான். இவன் பேசிய வார்த்தைகளை இதற்குமுன் யாரும் கேட்டிலர். இப்படி இவன் புரியாத சொற்கூட்டை வாயில் குதப்பி வெளியிட்டுக் கொண்டிருந்த வேளையில் நிலவு தன் பழைய வெளிச்சம் பெற்றது. மலைகளும் பள்ளத்தாக்குகளும் முகடுகளும் வெளிச்சம் பெற்றன. லாவிஸ் வெற்றிப் பெருமிதக் குரலில் நிலம் அதிரக் கத்தினான்.
”எல்லோரும் இப்போது எழுந்திருங்கள். நம் இரவுக் கடவுள் வெற்றி பெற்றான். நட்சத்திரங்களூடே இரவுக் கடவுள் தன் பயணத்தை இனி தொடர்வான். ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். நீங்கள் எழுப்பிய அந்தப் பிரார்த்தனைக் குரலும் வழிபடலும் தான் இரவுக் கடவுள், தீயக் கடவுளை வெல்வதற்கான வலிமையை அவனுக்குக் கொடுத்தது. கடவுள் நம்மீது அதிக மகிழ்ச்சியும் நம்பிக்கையும் கொண்டிருக்கிறான். இனி முன்னைக் காட்டிலும் அதிக பிரகாசத்துடன் வருவான்” என்றான்
பெருங்கூட்டம் எழுந்து நின்று, நிலவைப் பார்த்து ஆச்சரியப்பட்டது. நிலவு முன் போலவே தன் கிரணங்களை வீசி அழகுறக் காணலானது. அவர்களின் பயம் கலந்த முகத்தில் இப்போது நிம்மதி எழுந்தது. குழப்பம் வீசிய கூட்டத்தில் மகிழ்ச்சிக் கூக்குரல் ஏற்பட்டது. அவர்கள் ஆனந்த நடனம் ஆடத் தொடங்கினார்கள். அந்தப் பள்ளத்தாக்கு முழுதும் அவர்களின் கூச்சலில் நிரம்பியது.
அந்தக் கூட்டத்தின் தலைவன், லாவிஸை மரியாதைக் கலந்த ஆனந்தத்துடன் பார்த்தான். பின்பு லாவிஸிடம் பேச ஆரம்பித்தான்.
____ ____ ____
மேலும்
“இதுவரை எந்த மனிதனும் செய்யாத காரியத்தைச் செய்திருக்கிறாய் லாவிஸ். மறைந்திருக்கும் ரகசியத்தினை நீ அறிந்திருக்கிறாய். இந்த சூட்சுமத்தை யாரும் அறிந்ததில்லை. இதோ இந்தக் கூட்டத்திலும் உன்னைத் தவிர யாருக்கும் இது பற்றித் தெரியாது. எனது கூட்டத்தாரின் விருப்பப்படி உன்னை எனக்கடுத்த அதி உயர்நிலையில் வைக்கிறேன். நான் பெரும் வீரன். என் தோள்வலி பெரிது. நீ பேரறிஞன். அதிகம் கற்றவன். நீ இனிமேல் எங்களுக்கும் வானுயர் கடவுளுக்கும் இடையில் தூதுவனாக இருந்து அவர்களின் விருப்பத்தைத் தெரிந்து, அதைத் திறம்பட எங்களுக்குப் புரியும் வகையில் உரைக்க வேண்டும். கூடவே கடவுளர்களின் ஆசியும் அன்பும் பெறத் தேவையானவை என்ன என்பதையும் நீதான் கண்டறிந்து சொல்ல வேண்டும்.”
கூட்டத்தின் தலைவன், லாவிஸிடம் பயத்துடன் கூடிய மரியாதை கொண்டு பேசினான்.
லாவிஸ் ஒருவித திருட்டுத்தனமான மனத்துடன் அதே முகச் சாடையுடன் அதை ஏற்றுக்கொண்டான். ”மனிதனுக்குண்டான கடவுள், என் கனவில் வந்து சொல்லுவதை எல்லாம் உங்களின் விழிப்புணர்வுக்காக உங்களிடம் அதைச் சொல்லுவேன். கவலை வேண்டாம். உங்கள் கூட்டத்துக்கும் கடவுளுக்கும் நேரடித் தொடர்பாளனாக நான் இருப்பேன்.”
இப்படி லாவிஸ் சொன்னதும் கூட்டத்தின் தலைவன் அதிக மகிழ்ச்சியுடன் லாவிஸை ஒப்புக்கொண்டான். அவனுக்கு எழுபது செம்மறி ஆடுகளும் எழுபது குட்டி ஆடுகளும், இரண்டு குதிரைகளும், ஏழு கன்றுகளும் கொடுத்துப் பேசத் தொடங்கினான்.
”லாவிஸ், என்னுடைய ஆட்கள் உனக்காக மிகச் சிறந்த ஒரு வீட்டைக் கட்டித் தருவார்கள். நாங்கள் ஒவ்வொரு அறுவடை முடிவிலும் அறுவடையின் பலனில் ஒரு பங்கு உனக்காக அளிப்போம். இன்றிலிருந்து நீ எங்களின் மதிப்பிற்குறிய குருவாக இருப்பாய்.”
லாவிஸ் மகிழ்ச்சியிடன் அந்த இடத்திலிருந்து நகர முற்பட்ட போது, தலைவன் அழைத்தான்.
“லாவிஸ், மனிதர்களுக்கான கடவுள் என்றாயே அவரின் பெயர் என்ன? இரவுக் கடவுளுடன் சண்டை போட முயன்ற அந்த தீமைக் கடவுளின் பெயர் என்ன? இவர்களை முன்பே நாங்கள் அறிந்ததில்லையே”
லாவிஸ் தன் நெற்றியைத் தேய்த்துக்கொண்டே பதில் சொல்ல ஆரம்பித்தான்.
”மதிப்பிற்குறிய தலைவரே, அந்தக் காலம் மிகவும் முந்தியது. அதுவும் மனிதர்களைக் கடவுளர்கள் படைப்பதற்கு முன்பான காலம். எல்லாக் கடவுளர்களும் மிகவும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் மேலுலகத்தில் நட்சத்திரக் கூட்டங்களுக்குப் பின்னால் இருந்த காலம். கடவுளர்களின் கடவுள் தான், அவர்களின் தந்தை. கடவுளர்களுக்கு என்னவெல்லாம் தெரியாதோ அவையும் சேர்த்துக் கடவுளர்களின் தந்தை அறிந்திருந்தார். அந்தப் பிரபஞ்சத்தின் விதிகளுக்கான சூத்திர ரகசியத்தை அவர் மிகவும் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்தார்.”
லாவிஸ் நிறுத்தினான். பெருமூச்சினூடே சொன்னான். ”ஏழாவது யுகத்தின் பன்னிரண்டாவது வயதில் தான் கடவுளர்களின் கடவுளைச் சீற்றமுறச் செய்த அது நடந்தது”
____ ____ ____
மேலும்
கடவுளர்களின் கடவுள், எல்லாக் கடவுளர்களையும் மீறிய சக்தியை தன்னிடம் மட்டுமே வைத்திருந்தார். பன்னிரண்டாம் யுகத்தின் ஏழாம் வயதில், பாஹ்தார் என்னும் கடவுள், தன் தந்தையை எதிர்த்து நின்று எழுந்தான். அவன் எப்போதும் தன் தந்தையை வெறுத்துக்கொண்டே இருப்பவன். பாஹ்தார் தன் தந்தையிடம் கேட்டான்.
”நீங்கள் ஏன் எல்லாச் சக்திகளையும், ரகசியங்களையும் உங்களிடம் மட்டுமே வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் பிள்ளைகள் அல்லவா? நாங்கள் உங்களிடம் எதுவும் மறைப்பதில்லையே. அப்படி இருக்க, நீங்கள் ஏன் எங்களிடம் ஏன் மறைக்கிறீர்கள்? இது பிரபஞ்ச விதிக்கு எதிரானதல்லவா?” என்றான்.
”அதி முக்கியமான சக்திகளையும் ரகசியங்களையும் நான் மட்டுமே வைத்திருப்பேன். இந்த ரகசியங்களுக்கும் சக்திகளுக்கும் முதலும் முடிவுமானவன்” அதைக் கேட்டதும் பஹ்தார்,
“நீங்கள் உங்களின் சக்திகளையும் ரகசியங்களையும் பகிராவிட்டால், நானும் என் பிள்ளைகளும் என் பிள்ளைகளின் பிள்ளைகளுமென அனைவரும் உங்களை எதிர்த்து நிற்போம்” என்று சொன்னான்.
அந்த நிமிடத்தில் கடவுளர்களின் கடவுள் எழுந்து, தன் சிம்மாசனத்தைச் சொர்கத்தின் ஆழத்தில் வீசி எறிந்து பின் தன் வாளையும் கேடயமாக சூரியனையும் எடுத்துக்கொண்டார். கோபத்தில் அவர் குரல் அண்ட வெளிகள் அனைத்தையும் கிடுகிடுக்கச் செய்யும் வகையிலான ஓசையுடன் சொல்ல ஆரம்பித்தார்.
”இருளும் வேதனைகளும் நிறைந்த கீழுலகத்திற்கு இறங்கிப் போ, அதி தீய கலகக்காரா. சூரியன் முழுதும் எரிந்து சாம்பலாகும் வரை, நட்சத்திரங்கள் அனைத்தும் மேலும் துகள் துகளாக உடைந்து சிதறிக் காணாமல் போகும் காலம் வரை அங்கேயே மீளாச் சிறயில் கிடப்பாய்” என்று சாபமிட்டார்.
அந்த நொடியில் பஹ்தார் தன் சக்திகள் அனைத்தும் இழந்து, மேலுலகத்தில் இருந்து தீய ஆவிகளும் தீய சக்திகளும் நிறைந்த பாதாள உலகத்தில் வீழ்ந்தான்.
வீழ்ந்தவன் இந்த உலகத்தையே அச்சுறுத்தும் வகையிலான மிகக் கொடிய சபதத்தை எடுத்தான்.
”இனிமேல் என் பணி, என் தந்தையையும் சகோதரர்களையும் வணங்கும், அன்பு செலுத்தும் ஒவ்வொரு ஆத்மாவையும் தீமைகள் செய்யும் வலையில் வீழ்த்துவேன். அதன் மூலம் என் தந்தை, சகோதரர்களைப் பழிவாங்குவேன்” என்றான்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த குழுவின் தலைவன், அச்சத்தில் வெளிறி, சுருக்கங்கள் நிறைந்த தன் நெற்றியை லேசாகத் தடவியவாறே கேட்டான்.
”அப்படியானால் அந்த தீயக் கடவுளின் பெயர் பஹ்தார் அல்லவா”
” மேலுலகில் கடவுளர்களுடன் இருக்கும் போது மட்டுமே அவன் பெயர் பஹ்தாராக இருந்தது. எப்போது அதல பாதாள தீய உலகில் வீழ்ந்தானோ, அப்போதிலிருந்து பால்ஸாபவுல், சாத்தானைல், பலியால், ஜாமியெல், ஆஹ்ரிமன், மாரா, அப்டான், டெவில் பல பெயர்களை அவன் சுவீகரித்துக் கொண்டான். அவற்றில் கடைசியாகச் சாத்தான் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். அதுவே இன்று மிகவும் பரந்து அனைவரும் அறிந்திருக்கும் வகையில் நிலைத்து நிற்கிறது” என்றான் லாவிஸ்.
அந்தத் தலைவன் சாத்தான் என்ற வார்த்தையை தன் நடுநடுங்கும் குரலில் பலமுறை உச்சரித்துக் கொண்டான். அவன் குரல், காய்ந்த புதர்களினூடே பயணிக்கும் காற்றின் ஓசையை ஒத்திருந்து.
பின் மெல்லிய குரலில் ”சாத்தான் ஏன் மனிதர்களை அவ்வளவு வெறுக்கிறான்” என்று கேட்டான். லாவிஸ் சாத்தானுக்கும் மனிதனுக்குமான உறவு முறையை விளக்க ஆரம்பித்தான்.
____ ____ ____
மேலும்
லாவிஸ் உடனடியாகப் பதில் சொல்ல ஆரம்பித்தான்.
“ஒரு விதத்தில் சாத்தானின் சகோதர சகோதரிகளாக மனிதன் இருப்பதாலேயே அவர்களை வெறுக்க ஆரம்பித்தான்“
”அப்படியானால் சாத்தான், மனிதர்களின் உறவினன் அல்லவா” தலைவன் குழப்பமும் எரிச்சலும் கலந்த குரலில் கேட்டான்.
”ஆம் தலைவரே, ஆனால் அவன் தான் மனிதர்களின் மிகப் பெரிய எதிரி. பகலில் குழப்பங்களையும் துயரங்களையும் விதைத்து இரவில் மிகக் கொடிய கனவுகளால் மனிதர்களைத் துன்புறுத்துபவன் அவனே. துயரங்களின் பள்ளத்தில் தள்ளுவது அவனுடைய சக்தியைக் கொண்டே. உணவுகளின் தட்டுப்பாட்டை உருவாக்கி, மனிதர்களிடையேயும் மிருகங்கள் இடையேயும் நோயைப் பரப்புவதும் அவனே. அவன் அதி சிறந்த சக்தி கொண்ட தீய கடவுள். நாம் துயரத்தில் இருக்கும் போதெல்லாம் அவன் மகிழ்ந்து நம்மைப் பார்க்கிறான். நாம் சந்தோஷத்தில் இருக்கும் போது நம்மைக் கண்டு வெறுப்பில் முணுமுணுக்கிறான். அவனை ஆராய்ந்து அவனுடைய தீச்செயல்களைத் தவிர்க்க வேண்டும். அதனால் நம்மைச் சிக்க வைக்கும் பொறிகள் அவனுடைய பாதையை நாம் தவிர்க்க வேண்டும். அவனை என்னுடைய அறிவினால் நாம் அறிய வேண்டும்.
தன் கையில் இருந்த தடியின் மேல் தன் முகத்தை உயர்த்தி, தாங்கிக்கொண்டு தலைவன் பேசினான்.
“நம் வீடுகள் மீது ஊழிக் காற்றையும், விலங்குகள் அடைக்கப்பட்ட இடத்தில் தீர்க்க இயலாத அதி தீவிர நோய்களையும் ஏவி விடும் சாத்தானின் உள்ளிருக்கும் வேதனையான மாற்று சக்தியை நான் அறிந்துகொண்டேன். என் மக்களும் அதை அறிந்துகொள்வார்கள். லாவிஸ், நீ ஒருவனே மரியாதைக்கு உரியவன், கடவுளின் ஆசி பெற்றவன். ஆகவே இது போன்ற மாயங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்த சக்தி வாய்ந்த எதிரியைப் பற்றி என் மக்களிடம் நீயே சொல்ல வேண்டும். அவர்களைச் சாத்தானின் வழியில் செல்வதில் இருந்து தடுக்க வேண்டும்”.
லாவிஸ் மிகுந்த தன் சூழ்ச்சியினால் விளைந்த நன்மைக்கான மகிழ்ச்சியுடனும், வைன் தந்த போதையுடனும் தலைவனையும், அந்தப் பழங்குடிக் கூட்டத்தையும் விட்டு தான் தங்கும் இடத்திற்கு நகர்ந்தான். அந்த இரவு எல்லாருக்கும் மிகுந்த துயரம் கொண்டதாகவும், தன் படுக்கைகளைச் சுற்றி பல பேய்களும், அதி பயங்கர பிசாசுகளும், துன்புறுத்தும் கனவுகளுமாய் கழிந்தது, லாவிஸைத் தவிர்த்து.
____ ____ ____
மேலும்
சாத்தான் தன் பேச்சைச் சற்று நிறுத்தினான். ஃபாதர் சமான் கலங்கிய பார்வை, இறந்து உறைந்து போன சிரிப்புடனும் சாத்தானை உற்று நோக்கினார். பிறகு சாத்தான் தொடர்ந்தான்.
”இப்படித்தான் தெய்வங்களின் இருப்பு, மண்ணில் உருவானது. அப்படி அவை உருவாகும் போதே என்னுடைய பிறப்பும் உருவானது. லாவிஸ் தான் முதன் முதலாக என்னுடைய செயலை உண்டு பண்ணி அங்கீகரித்தான். அவன் இறந்த பிறகு, இந்த வேலையானது தெய்வங்களும் நானும் பரிபூர்ணமாக மக்களால் ஏற்கும் வகையில் இந்தத் தொழில் புனிதமானதாகவும், பழுத்த அறிவுடையதாகவும், இது மனதும் சுத்தமான ஆத்மாக்களால் மட்டும் ஏற்றுச் செய்யக் கூடியதாகவும் அவனின் சந்ததியினரால் மிகப் பரவலாக்கப் பட்டது.
பாபிலோனில், அங்கிருக்கும் பாதிரியார் என்னைத் தன் மந்திரங்களால் எதிர்த்துச் சண்டையிடும் முன் மக்கள் ஏழு முறை வழிபட்டனர். நைனெவேயில், கடவுளையும் மனிதனையும் இணைக்கும் உள்ளர்த்தங்களும் சூட்சுமங்களும் அறிந்த தங்கச் சங்கிலியாக, ஒரு மனிதனைக் கண்டறிந்தார்கள். திபெத்தில் சூரிய சந்திரர்களுக்கு பிறந்தவனாகக் கூறிக்கொண்டு ஒருவன் என்னுடன் சண்டையிடத் தொடங்கிங்கினான். பைபிளச், எஃபிசச் மற்றும் ஆண்டியோக் போன்ற இடங்களில் என்னிடம் இருந்து காத்துக் கொள்ள மக்கள் தங்களின் குழந்தைகளின் உயிரையும் எனக்கு எதிரானவர்களுக்குக் காவு கொடுத்தனர். ஜெருசலேம் மற்றும் ரோமில் மக்கள் தங்களின் வாழ்க்கையை என்னை எதிர்த்து, என்னுடன் சண்டையிடுபவர்களிடம் ஒப்படைத்தனர்.
”உலகின் சூரியன் ஒளிபடும் அனைத்து இடங்களிலும் படிப்பின் போது, மத போதனை வட்டங்களிலும், தத்துவங்களிலும் கலைகளிலும் என்னுடைய பெயரே மைய அச்சாக மாறிப் போனது. நான் இல்லாமல் போயிருந்தால், எந்தக் கோவில்களும் கோபுரங்களும் எழுப்பப்பட்டிருக்காமல் போயிருக்கும். மக்களின் தனித்துவ எண்ணங்கள், மன உறுதி போன்றவற்றிற்கு நானே ஆதாரமாகிறேன்.
நானே கையாய் இருந்து மனிதனின் கைகளை இயக்குகிறேன். என்றும் நிலைத்திருக்கும் சாத்தான் நான். தங்களைக் காத்துக்கொள்ள மக்கள் எதிர்த்துப் போராடும் சாத்தான் நான். மாபெரும் மாயையை உள்வாங்கியதற்கான இந்தத் தண்டனையில் இருந்து மீள, மக்கள் எனக்கெதிரான தங்கள் போராட்டத்தை நிறுத்தினால், அவர்களின் மனங்களின், இதயங்களின் உயிர்களின் இயக்கம் நின்று போகும்.”
“நான் ஆண்களின் மனத்திலும் பெண்களின் இதயத்திலும் கோபத்தின் போது மௌனமாய் எழும் புயல். என்மீதான பயத்தில் என்னை தண்டிக்க அவர்கள் கடவுளர்களைத் தரிசிக்க, பல இடங்களுக்குப் பயணிக்கிறார்கள். அல்லது என்னைச் சரணடைந்து என்னை சந்தோஷிக்கச் செய்யும் இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு செல்கிறார்கள். இரவின் தனிமையில் என்னை அவர்களிடம் இருந்து விலக்கப் பிரார்த்திக்கும் சாமியார்களின் படுக்கைகள் விபச்சாரர்களின் கூடாரம் போல, அவை என்னை அழைத்துக்கொண்டே இருக்கும். நான் நாத்தான், எங்கும் நிறைந்திருக்கும் நித்தியப் பேராற்றல்.”
”உலகில் அச்சத்தை அடித்தளமாகக் கொண்டு எழுந்து நிற்கும் அத்தனை கன்னி மாடங்களையும் பேராலயங்களையும் கட்டியவன் நான். காமத்தின், சுய திருப்தியின் அடித் தளத்தைக் கொண்டு போதைக் கூடங்களையும், சூனியக் கூடாரங்களையும் கட்டுவித்தவன் நான்.
என் இருத்தல் நின்றுபோனால், பயமும் மகிழ்ச்சியும் இந்த உலகத்தை விட்டு விலகிப் போகும். அவை இல்லாமல் போகும் வேளையில், ஆசைகளும் நம்பிக்கைகளும் மனித மனத்தை விட்டு வெளியேறிப் போகும். வாழ்க்கை குளிர்ந்து வெறுமையாகி நரம்பறுந்த யாழைப் போலாகிப் போகும். நான் சாத்தான், என்றும் நிலைத்திருப்பவன்.
பொய், அவதூறு, துரோகம், மோசடி மற்றும் கேளிக்கைகளின் அடிப்படை நான். இவை உலகத்தில் இருந்து நீக்கப்பட்டால், மனித குலம் முட்கள் நிறைந்த வனாந்திரம் போல மாறிப் போய்விடும். நான் சாத்தான், என்றும் நிலைத்திருப்பவன்.
நான் பாவங்களின் தாய் தந்தை. பாவங்கள் மறைந்து போனால், பாவங்களுக்கான கட்டமைப்புடன் பாவத்திற்கு எதிரான போராளிகளும் அழிந்து போவார்கள். அனைத்து தீமைக்கும் நான் அடிப்படையான இதயமாக இருக்கிறேன். என் இதயத்தின் துடிப்பை நிறுத்துவதன் மூலம், மனித குலத்தின் அத்தனை இயக்கங்களையும் நிறுத்த விரும்புகிறீர்களா? என் அழிவிற்குப் பின்னான விளைவுகளை ஏற்பீர்களா? நானே காரணகர்த்தா. இந்தக் கொடும் துயர் நிறைந்த வனாந்தரத்தில் இறக்க விடுவீர்களா? உங்களுக்கும் எனக்குமான மிக இறுகிய பந்தத்தை அறுக்க விரும்புகிறீர்களா? சொல்லுங்கள் ஃபாதர் ”
சாத்தான் தன் கரங்களை விரித்து, தன் தலையை முன் சாய்த்து, ஆழ்ந்த பெருமூச்சு விட்டான். அவனுடைய முகம் சாம்பல் நிறமாகி, நைல் நதி தீரத்தில், பல காலமாய் வீணாய் நிறுவப்பட்டிருக்கும் பழைய எகிப்திய சிலையை ஒத்திருந்தது.
பிறகு தன் ஒளிரும் கண்களை ஃபாதர் சமானின் மீது நிலை நிறுத்தி வலுவிழந்த குரலில் சொன்னான், ”நான் களைப்புற்று வலுவற்று இருக்கிறேன். இழந்துகொண்டிருக்கும் என் சக்தியை ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்தவற்றைப் மீண்டும் பேசுவதில் செலவழித்து நான் தவறு செய்துவிட்டேன். இப்போது நீங்கள் உங்கள் விருப்பப்படி எதுவும் செய்யலாம். என்னை உங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று காயங்களுக்கு மருந்திடுவதோ அல்லது இங்கேயே என்னை இறக்க விடுவதோ இனி உங்களின் விருப்பம்.”
சாத்தான் தன் பேச்சை நிறுத்தினான்.
ஃபாதர் சமான், பயத்தில் நடுங்கும் தன் கைகளைத் தேய்த்துக்கொண்டார். மன்னிப்புக் கோரும் வார்த்தைகளுடன் பேசத் தொடங்கினார்.
”என் அறியாமைக்காக மன்னிக்கவும். ஒரு மணி நேரத்துக்கு முன் நான் அறியாத பலவற்றை இப்போது அறிந்துகொண்டேன். உன்னிருப்பு, உலகில் ஆசைகளைத் தூண்டுகிறது. அந்தத் தூண்டுதலை அளவாகக் கொண்டு மனிதனுக்கான மதிப்பைக் கடவுள் அமைக்கிறான். எல்லாம் வல்ல கடவுள், எல்லா மனிதர்களையும் ஆன்மாக்களையும் இதைக் கொண்டே அளவிடுகிறான். நீ இறந்தால், இவை ஆசையும் தூண்டுதலும் மரித்துப் போகும். அத்துடன் மனிதனை எச்சரித்து வாழ்வில் உயர்த்தும் தனிச் சக்தியும் அழிந்து போகும்.“
” நீ இறக்கக் கூடாது. நீ இறந்து மக்கள் அதை அறிந்தால், நரகத்தின் மீதான பயம் நீங்கி, பாவங்களுக்காக கடவுளை வழிபடுதல் நின்று போகும். நீ வாழ வேண்டும். மனிதர்களின் அறிவையும் பாவத்தையும் உன் வாழ்க்கையே துணையாக நின்று இரட்சிக்கும்.”
” மனிதர்களின் மீது எனக்கிருக்கும் அன்பினால் உன் மீதான என் வெறுப்பை நான் தியாகம் செய்கிறேன்.“
நிலமதிரச் சாத்தான் சிரித்து, பின் சொன்னான்.
” ஃபாதர், நீங்கள் புத்திசாலி, இறையியலின் உண்மையை வெகுத் தெளிவாக அறிந்தவர் நீர். என்னுடைய இருப்பின் தேவையும் நான் அறியாமல் இருந்தேன். உம்முடைய அறிவினால் இப்போது அறிந்தேன். கூடவே நம்மிடையேயான ஒருவருக்கொருவரின் தேவையையும் கூட அறிந்தேன்.”
”அருகில் வா சகோதரா, இந்த இருள் என் வலியில் ஆழ்ந்துகொண்டிருக்கிறது. என்னுடைய பாதி இரத்தம், இந்தப் பள்ளத்தாக்கு மணலில் ஓடி மறைந்துவிட்டது. உடைந்து உருக்குலைந்து மீதமிருக்கும் இந்த உடலை நீ உதவி செய்து காப்பாற்றாவிடில், விரைவில் மரணம் தழுவும்.”
ஃபாதர் சமான், தன் சட்டையின் கைகளை மேலேற்றி, சாத்தானைத் தூக்கிக்கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தார்.
அவருடைய உடைகளிலும், தாடியிலும் மேலிருந்து இரத்தம் பரவிக் கொண்டிருந்தது. ஆனால் ஃபாதர் சமான், சிரமத்துடன் இறந்துகொண்டிருக்கும் சாத்தானுக்காகப் பிரார்த்தித்துக்கொண்டு, இருள் சூழ்ந்து பேரமைதி நிறைந்த அந்தப் பள்ளத்தாக்கின் நடுவில், குனிந்து, தன் முதுகில் மிகுந்த சுமையைச் சுமந்துகொண்டு தன் கிராமத்தை நோக்கி நடந்துகொண்டிருந்தார்.