இந்து புராணக் கதைகள்; தீபாவளி பெயர்க் காரணம்

தீபம்  என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளிதரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர்  மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும்.  ஒரு தீயகுணத்தை எரித்துவிட வேண்டும்.

 
இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின்வழியாகக் கூறுகின்றனர். இராமாயண இதிகாசத்தில், இராமர், இராவணனை அழித்து விட்டு, தனது  பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக்  கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப்படுகிறது.
 
நரகாசுரனின் பெயர் காரணம்: 
 
நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு  இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.
 
இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.
 
இதை அறிந்த மகாவிஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர  வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன்  போரிட்டார்.
 
அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.
 
அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி  போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள்.
 
இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்