சேஷசமுத்திரம் தலித்துகள் மீது கொடிய தாக்குதல்: எவிடன்ஸ் அமைப்பின் ஆய்வறிக்கை!

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2015 (14:50 IST)
சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது கொடூர தாக்குதல் நடந்துள்ளது. தலித்துகளின் குடிசைகள், கோவில் தேர் எரிக்கப்பட்டு, தலித் பெண்கள் ஆடைகள் உருவப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. போலீசாரின் அலட்சியமும் ஜாதிய சக்திகளின் சதியும் இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் என மதுரையில் உள்ள எவிடன்ஸ் அமைப்பின் உண்மை அறியும் குழு நேரில் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


 
எவிடன்ஸ் அமைப்பின் உண்மை அறியும் குழுவின் அறிக்கை விவரம் வருமாறு:-
 
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் கடந்த 15.08.2015 அன்று சுமார் 500க்கும் மேற்பட்ட ஜாதி இந்துக்கள் பெட்ரோல் குண்டு, அரிவாள், கடப்பாறை, உருட்டுக்கட்டை, கருங்கல், பீர்பாட்டில்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தலித் குடியிருப்பில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 7 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. தலித் பெண்களின் சேலையை உருவி ஆபாசமாக பேசி தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்ட எஸ்பி நரேந்திர நாயர் உள்ளிட்ட 11 போலீசார் காயமடைந்துள்ளனர். தலித் சமூக மக்களுக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் தேர் முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சங்கராபுரம் காவல்நிலையத்தில் குற்றஎண்.329/2015 பிரிவுகள் 147, 148, 341, 323, 324, 506(2), 307, 436 இ.த.ச. மற்றும் பட்டியல் ஜாதியினர் பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த அவசரச் சட்டம் 2014 பிரிவு 3(2)(a) உள்ளிட்ட 3 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு 7 பெண்கள் உட்பட 82 ஜாதி இந்துக்கள் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
 
இச்சம்பவம் குறித்து எமது எவிடன்ஸ் அமைப்பின் உண்மையறியும் குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு 17.08.2015 அன்று நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டனர். களஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இப்பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்படுகிறது.
 
சேஷசமுத்திரம் கிராமத்தில் ஜாதி இந்துக்களான வன்னியர் சமூகத்து மக்கள் சுமார் 2000 குடும்பங்களாகவும், தலித் தரப்பில் பறையர் சமூகத்து மக்கள் சுமார் 80 குடும்பங்களாகவும் வசித்து வருகின்றனர்.
 
தலித் தரப்பில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் இக்கோவில் திருவிழா நடந்து வருகிறது. திருவிழா தோறும் இதுவரை டயர் வண்டியில் மாரியம்மன் உருவ சிலையை வைத்து தலித்துகள் தங்கள் குடியிருப்பில் பவனி வந்துள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத் தேர்தலில் சேஷசமுத்திரம் பஞ்சாயத்து தலைவராக ஜாதி இந்துவான சுப்பிரமணியன் என்பவர் தலித் மக்களிடம் ஊராட்சி மன்றத் தேர்தலில் நீங்கள் எனக்கு வாக்கு அளித்தால் உங்களுக்கு தேர் வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். அதனடிப்படையில் தலித் மக்கள் சுப்பிரமணியனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துள்ளனர்.
 
இதனடிப்படையில் ரூ.1,50,000 தலித் தரப்பில் வரி வசூலிக்கப்பட்டும், ரூ.3 இலட்ச ரூபாய் சுப்பிரமணியன் நன்கொடையாக கொடுத்தும் தேர் செய்யப்பட்டுள்ளது. ஆக தேரின் மதிப்பு 4,50,000 ரூபாய்.
 
இந்நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு பொதுப்பாதையில் தேர் பவனிக்கு தலித் மக்கள் ஆயத்தமாக இருக்கிறபோது ஜாதி இந்து தரப்பில் பொதுப்பாதையில் தலித்துகள் தேர் பவனி வர அனுமதிக்க முடியாது என்று தடுத்துள்ளனர். ஜாதி இந்துக்கள் தரப்பில் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியன், கவுன்சிலர் அண்ணாமலை ஆகிய இருவரின் தலைமையில் தான் இந்த தடுப்பு நடவடிக்கை நடந்துள்ளது. அதுமுதல் சேஷசமுத்திரம் தலித் மக்களின் மாரியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் மாவட்ட நிர்வாகம் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு போட்டு வந்துள்ளது.
 
மேலும் அடுத்த பக்கம்..

இந்த வருடம் தலித் சமூகத்து மக்கள் எப்படியாவது தேர்பவனியை நடத்திவிட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தனர். இதனைத் தெரிந்து கொண்ட சேஷசமுத்தரம் ஊராட்சி மன்றத் தலைவர் சுப்பிரமணியன் அவர்கள் கடந்த 14.08.2015 அன்று சங்கராபுரம் காவல்நிலையம் சென்று தேர் பவனி நடந்தால் உயிர்சேதம் ஏற்படும் என்று புகார் கொடுத்துள்ளார். இது புகார் என்பதை விட அப்பட்டமான மிரட்டலாகவே தெரிகிறது. இதனடிப்படையில் அன்று மாலை சுமார் 3.00 மணியளவில் சங்கராபுரம் தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. தாசில்தார் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தலித் தரப்பில் அருணாச்சலம், ஐயப்பன், ராமர் உள்ளிட்ட 5 நபர்களும் ஜாதி இந்து தரப்பில் 200 நபர்களும் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் போது நாங்கள் எந்த தகராறிலும் ஈடுபடமாட்டோம் என்று ஜாதி இந்து தரப்பில் உறுதிமொழி அளித்துள்ளனர்.
 
இந்நிலையில் 15.08.2015 அன்று மாலை சுமார் 7.00 மணியளவில் சுமார் 100 பேர் கொண்ட ஜாதி இந்து இளைஞர்கள் கற்களையும் உருட்டுக்கட்டையும் எடுத்து வந்து தலித் தரப்பில் அம்மன் கோவில் பகுதியில் கட்டப்பட்டிருந்த டியூப்லைட்டுகளை உடைத்துள்ளனர். டிரான்ஸ்பார்ம் மீது பெரிய கற்களை கொண்டு செயலிழக்க வைக்கின்றனர். இவையெல்லாம் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த 40 போலீசார் முன்னிலையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் லெட்சுமி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மாலதி ஆகியோர் தேர் பவனி நடத்த அனுமதி கொடுத்திருந்ததனால் தலித்துகள் தங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று நம்பியிருந்தனர். ஆனால் போலீசார் அமைதியாக இருப்பதைப்பார்த்து அப்பகுதியைச் சேர்ந்த தலித்துகள் போலீசாரிடம் சென்று, அந்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறியதற்கு, தாக்குதலா நடத்துகிறார்கள் டியூப்லைட்டைத்தானே உடைக்கிறார்கள். ஒன்றும் நடக்காது தைரியமாக இருங்கள் என்று கூறியுள்ளனர்.
 
இதனிடையே 30 நிமிடம் கடந்து மேலும் ஜாதி இந்து தரப்பில் சுமார் 400 பேர் அப்பகுதிக்கு வருகை தந்து 500 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு, அரிவாள், கடப்பாறை, உருட்டுக்கட்டை, கருங்கல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்து தலித் தரப்பில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்பகுதிக்கு வந்திருந்த விழுப்புரம் மாவட்ட எஸ்பி நரேந்திர நாயர் அவர்களை அக்கும்பல் சூழ்ந்து கொண்டு சட்டையைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த கும்பல் தலித்துகளை பார்த்து ஜாதி ரீதியாக இழிவாகப்பேசி, உங்களுக்கெல்லாம் தேர் கேட்குதோ, நீங்க எப்படிடா தேர் விடலாம் என்று கூறிக்கொண்டே பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தலித் குடியிருப்பில் வீசத் தொடங்கியுள்ளனர்.
 
 
இதனடிப்படையில் எமது எவிடன்ஸ் அமைப்பு கீழ்கண்ட பரிந்துரைகளை அரசுக்கு முன்வைக்க விரும்புகிறது.
 
பரிந்துரைகள்:
 
 
நன்றி: A.கதிர், செயல் இயக்குனர்
எவிடன்ஸ்

வெப்துனியாவைப் படிக்கவும்