கலைஞர் அவர்களே யாரிடம் கேட்கிறீர்கள் புகைப்படம்

வியாழன், 6 அக்டோபர் 2016 (15:53 IST)
இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான கலைஞர் கருணாநிதி அவர்களின் இலக்கியங்களால், அனுபவங்களால், சமூகநீதி போராட்டங்களால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். தமிழகத்தின் பிரதான கட்சி தலைவர் என்ற முறையில் முதல்வரின் மருத்துவ அறிக்கை கோர உங்களுக்கு உரிமை இருக்கிறது. அதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. புகைப்பட ஆதாரங்கள் கேட்டது அநாகரீகத்தின் உச்ச கட்டம்.


 
 
கவர்னர் முதல்வரை மருத்துவமனையில் சந்திக்கிறார். கவர்னர் மாளிகை முதல்வரின் நலம் குறித்து அறிக்கை வெளியிடுகிறது. அதன் பிறகும் கவர்னர் முதல்வரை சந்தித்தாரா? கவர்னரின் பழக்கூடையை நேரடியாக பெற்றுக்கொண்டாரா  என்று கேட்பது என்ன அரசியல் நாகரிகம் கருணாநிதி அவர்களே?
 
கவர்னர் முதல்வரை பார்க்க வேண்டும், தலைமை செயலர் அறிக்கை தரவேண்டும் என்றெல்லாம் கேட்கும் நீங்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து எதிர்க்கட்சி தலைவரை (முதல்வரை காண) மருத்துவமனைக்கு அனுப்பலாம்? ஏன் இந்த தயக்கம்? தொல்.திருமவளவனால் முடிந்த விஷயம் உங்களால் முடியவில்லை.
 
டிவி விவாதங்களில் திமுக அறிவு ஜீவிகள் முதல்வரை ஹெல்த் ரிப்போர்ட் மக்கள் பார்வைக்கு வைக்கபட வேண்டும். அமெரிக்க ஜனாதிபதிகள் தங்களது ஹெல்த் ரிப்போர்ட்டை மக்கள் பார்வைக்கு வைக்கிறார்கள் என்கிறார்கள். அமெரிக்க கலாச்சாரம் வேறு நமது கலாச்சாரம் வேறு என்பதை மறந்து விட்டீர்களா?
 
ஒரு வழக்கு விசாரணையின் போது தங்களது துணைவியார் தயாளு அம்மாள் பேசும் மனோநிலையில் இல்லை. பிறர் பேசுவதை புரிந்து கொண்டு பதில் அளிக்கும் மனநிலையில் இல்லை என்று மருத்துவ அறிக்கைதான் சமர்ப்பிக்க பட்டது. புகைப்பட ஆதாரங்களாக இல்லை.
 
என் அறிவுக்கு எட்டிய வரை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நீண்ட மருத்துவ விடுமுறையில் செல்லும் தங்களது ஊழியர்களிடம் மருத்துவ அறிக்கை மட்டுமே கேட்கின்றன, புகைப்பட ஆதாரங்கள் கோருவது இல்லை. அதன் பெயர் தான் நம்பிக்கை.
 
எங்களின்  முதல்வர் நலமாக இருக்கிறார், நலம் பெற்று வருகிறார் என்பதே எங்களின் நம்பிக்கை. நம்பிக்கைகள் மீது கேள்விகள் கேட்பது சரியா?
 
நீங்களும் அந்த நம்பிக்கையை பெற முடியும். ஒரு நிமிடம் உங்களின் கண்களை மூடுங்கள். நீங்கள் அடிக்கடி சொல்லும் ஒரு இடம், அண்ணாவின் அன்பு பாசறை. அண்ணாவின் பாசறையில் அன்பு என்னும் அலமாரியில் நம்பிக்கை என்னும் புத்தகம் இருக்கும் அதன் பக்கங்களை புரட்டுங்கள், கருணாநிதி அவர்களே!

இரா .காஜா பந்தா நவாஸ் ,

[email protected]

வெப்துனியாவைப் படிக்கவும்