மோடி என்னும் மாயக்காரனின் மாய வித்தை

புதன், 21 டிசம்பர் 2016 (12:26 IST)
இசை வித்தகன்: என் பாலிய வயதில் நான் Pied Piper of Hamelin என்ற கதையைக் கேட்டு இருக்கிறேன். அதில் எலிகள் அதிக அதிகமாக பெருகி விட்ட கேமிலின் என்ற ஜெர்மனிய நகர மேயர் வருத்தம் அடைகிறார். தனது அமைச்சர்களின் பரிந்துரைப்படி இசை குழல் வித்தகனை தன் ராஜ சபைக்கு அழைக்கிறார்.


 


இசை குழல் வித்தகன்  சாதாரண ஆள் இல்லை. அவனது இசைக்கு மயக் காதவர்களே  கிடையாது. சபையில் மேயர், நகரின் அனைத்து எலிகளையும் ஒழித்தால் 1000 கில்டர் தங்க நாணயங்கள் தருவதாக உறுதி சொல்கிறார். தனது இசையால் நகரின் அனைத்து எலிகளையும் மயங்க வைத்து ஆற்றில் மூழ்கடித்து வெற்றி காண்கிறார் வித்தகன். மக்கள், எலிகள் இனி இல்லை என்று சந்தோசப் படுகிறார்கள். ஆனால் மேயர் முன்பு வாக்கு அளித்ததுப் போல 1000 கில்டர் தங்க நாணயங்கள் அல்லாமல் 50 கில்டர் தங்க நாணயங்கள் தர முற்படுகிறார். இசை குழல் வித்தகன் கோபப்படவில்லை, மீண்டும் இசைக்க ஆரம்பிக்கிறான். இந்த முறை அவன்  கவர்ந்தது எலிகளை அல்ல, குழந்தைகளை. மேயரும், மக்களும் பதறிப் போய் அவனுக்கு வாக்களித்தப்படி 1000 கில்டர் தங்க நாணயங்களை தருகின்றன.

பேச்சு வித்தகன்
 

கேமிலின் இசை வித்தகனைப் போல ஒரு பெரிய ஜனநாயக நாட்டில் மேன்மை பொருந்திய பேச்சு வித்தகன் ஒருவர் இருக்கிறார். தேர்தலின் போது அவர் பேசப் பேச மக்கள் அதிகம் அதிகமாக கவரப்பட்டன. மாயக் கண்ணன் புல்லாங்குழலை ஓசை கேட்ட கோபியர் போல. ஒரு நாள் தேசத்தின் சிம்மாசனம் அவர் வசம் ஆனது. காலங்கள் சென்றது. ஓர் ஆண்டுகள் கழிந்து  மகுடி சத்தம் நின்றவுடன் சீரும் பாம்புகளைப் போல மக்கள் கேள்விகளை கேட்க அரம்பித்தன.  இந்த முறை வித்தகன் பேசவில்லை. இசைக்க ஆரம்பித்தரர். வித்தகன் கருப்பு பணம் எனும் ராகத்தை பாட ஆரம்பித்தார்.

என்ன ஆச்சரியம்! மக்கள் எல்லாம் குட்டி குட்டி எலிகளாக மாறி, வங்கிகள்/ATMகள்  நோக்கி வரிசையாக செல்ல ஆரம்பித்தன. வரிசையில் நிற்கும் எலிகள் எல்லாம் குட்டி குட்டி எலிகள். வித்தகன் வாசிக்க போகிறான் என்பதை அறிந்த கருத்து கொளுத்த எலிகள் எல்லாம் தங்களின் காதுகளில் பஞ்சை வைத்து அடைத்து கொண்டன. அந்த கருத்து கொளுத்த எலிகளில் மாட்டியது என்னவோ சில ரெட்டி எலிகளும், இரானி எலிகளும் தான். சில எலிகள் வித்தகனை நோக்கி கேள்விகள் கேட்டதும், அதன் மீது தேச துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டது.

இன்றாவது பண்டம் கிடைக்குமா? என்று ஏக்கத்தில் எலிகள். அசரவில்லை வித்தகன். ஏன் எனில்? வரிசையில் நிற்பது குட்டி குட்டி எலிகள் தானே: வாக்களித்த மக்கள் இல்லையே என்ற நினைப்பு. நாள் ஒரு வண்ணமும், பொழுது ஒரு மேனியுமாக ஏழு சுவரங்களில் கட்டம் கட்டி பாட ஆரம்பித்தார் வித்தகன். சில எலிகள் பேங்க்/ATM வாசலில் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது போல நாதி அற்று பரலோகம் போயின. அப்போதும் வித்தகன் அச்சம்  கொள்ளவில்லை. ஏன் எனில்? வரிசையில் நிற்பது குட்டி குட்டி எலிகள் தானே: வாக்களித்த மக்கள் இல்லையே என்ற நினைப்பு.

அவர் 5000 ராகம் பாட ஆரம்பித்து இருக்கிறார் இதன்படி குறு எலிகள் இரு முறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டு  பண்டங்கள் பெறப்படும். இது முந்தய டிசம்பர் 31  ராகத்திற்கு முற்றிலும் மாறானது.

புதிய தேசத்தில் நரிதனை பரி ஆக்கிய மாணிக்கவாசகர் போல குட்டி குட்டி எலிகளை எல்லாம் மக்களாக மாற்றப்படுவார்கள். அதற்கு புகாரி ராகம் தயாராக வைத்து இருக்கிறார் வித்தகன். அவன் அசைக்கிறான், இல்லை அவன் இசைகிறான். எலிகள் எல்லாம் தன் பண்டத்திற்காக  தெருவில் நிற்கின்றன. வித்தகன் மாயக்காரன் மட்டும் அல்ல, தந்திரக்காரனும் கூட.

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]












 

 

வெப்துனியாவைப் படிக்கவும்