ராமநாதபுரத்தில் கடல் சீற்றம்: மீன்பிடிக்கத் தடை

திங்கள், 28 டிசம்பர் 2015 (16:35 IST)
கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 

 
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. ராமேஸ்வரம், மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. நடுக்கடலில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
இதேபோல், கடல் சீற்றம் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. தூத்துக்குடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரைதிரும்பியுள்ளனர்.
 
இதனால் 30 ஆயிரம் மீனவர்களும், 60 ஆயிரம் அதை சார்ந்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். மீன்பிடித் தடை காரணமாக நாள் ஒன்றுக்கு சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்