நடப்பது மக்களாட்சிதானே, மகாராணியின் ஆட்சி அல்லவே?

புதன், 24 ஆகஸ்ட் 2016 (12:52 IST)
தலைமைச் செயலக வளாகத்தில் போட்டி சட்டப்பேரவைக் கூட்டம் நடத்திய எதிர்க்கட்சித் தலைவர் உட்பட 60 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு இருப்பது மீண்டும் மகாராணியின் ஆட்சியை நினைவுப்படுத்துகிறது. முதலமைச்சர் அவர்களே! உங்களை யாரும் விமர்சிக்கவே கூடாது என்று நினைக்கிறீர்களா?


 

முதலமைச்சர் விமர்சனங்களுக்கு அபாற்பட்டவரா என்ன? வானளாவிய அதிகாரம் படைத்த சபாநாயகரின் சஸ்பெண்ட் உத்தரவு பற்றி நாங்கள் கேள்வி கேட்கவில்லை. போட்டி சட்டப் பேரவைக் கூட்டம் நடத்தி சபாநாயகரையும் அமைச்சர்களையும் சீண்டினார்கள் என்பதற்காக வழக்குகள் பாய்வதா? நடப்பது மக்கள் ஆட்சியா? மகாராணி ஆட்சியா? சட்டமன்றத்தில் அதிகநேரம் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சிதலைவர் என்ற சிறப்பு பெற்றவர் நீங்கள். தங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை.

இந்த தேசத்தின் பிரதமர் பாராளுமன்றங்களிலோ, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் சட்டமன்றத்திலோ பேசும்போது பிற உறுப்பினர்கள் குறுக்கிட்டு பேச முடியும்? ஆனால் பாராளுமன்றங்களிலோ சட்டமன்றத்திலோ எதிர்க்கட்சி தலைவர்கள் பேசும்போது முதலமைச்சர்/பிரதமர் உள்பட யாரும் குறுக்கிட்டு பேசமுடியாது என்பதுதான் ஜனநாயகத்தின் சிறப்பு.

மிகவும் கவனமாக தடுக்கப்பட்ட பகுதிக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்தல், அனுமதியின்றி கூடுதல் என இருபிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. போட்டி சட்டமன்றம் நடத்தினார்கள், சபாநாயகரையும் அமைச்சர்களையும் சீண்டினார்கள் என்று ஏன் வழக்குபதிவு செய்யவில்லை? ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குகள் ஏன் தொடுக்கவில்லை?

தங்களுக்கு நன்றாக தெரியும், தெறிகெட்டு ஓடும் குதிரையின் மூக்காணி நீதிமன்றங்களின் கையில் உள்ளது. தங்களின் மீதும், அரசின் மீதும் வரும் விமர்சனங்களை முதலில் முழுமையாக கேளுங்கள், பிறகு விளக்கம் சொல்லுங்கள். அதைவிட்டு எதற்குஎடுத்தாலும் வழக்குகள் என்றால்? மீண்டும் மீண்டும் நீதிமன்றங்களின் கண்டனத்திற்கு ஆளானால்? நடப்பது மக்களாட்சிதானே, மகாராணியின் ஆட்சி அல்லவே?

தங்கள் வீட்டு பெரிய நூலகத்தைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம். அந்தநூலகத்தில் நிச்சயம் திருக்குறள் இருக்கும். திருக்குறளை எடுத்து பெரியோரைத் துணைக்கோடல் அதிகாரம் குறள் 448 – இடிப்பாரை இல்லாத ஏமராமன்னன் கெடுப்பாரிலானுங் கெடும், குறளை ஒருமுறை படிக்கவும். தங்களுக்கு சாமானியனால்கூட அறிவுரை கூறமுடியும் என்று நினைக்கிறேன்.

2006ல் அதிமுகவினர் அவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டபோது, தனி ஆளாக, நீங்கள் மட்டும் அவையில் பங்கேற்று விவாதத்தில் பேசினீர்கள். தங்களின் துணிச்சலை நாடு அறியும், விளக்கம் தேவை இல்லை.

துணிவு இருந்தால் திமுக தலைவர் கருணாநிதி அவைக்கு வந்திருக்க வேண்டும், விவாதத்தில் பங்கேற்று பேசியிருக்க வேண்டும் என்று பேசுவதற்கு முன்பு தாங்கள் எதிர்க்கட்சி ஜனநாயகம் குறித்து முழுமையான அறிவும் தெளிவும் பெறவேண்டும். ஏன் என்றால் நடப்பது மக்களாட்சிதானே, மகாராணியின் ஆட்சி அல்லவே.

கட்டுரைஎழுத்தாளர் இரா .காஜா பந்தாநவாஸ்,
தொடர்புக்கு [email protected]


வெப்துனியாவைப் படிக்கவும்