அலங்காநல்லூர் வாடிவாசல் உலகுக்கு சொன்னது

திங்கள், 16 ஜனவரி 2017 (15:06 IST)
“தமிழன் என்று ஒரு இனம் உண்டு தனியே அவருக்கு ஓர் குணம் உண்டு”:- இரண்டு ஆண்டுகளாய் சட்டப் போராட்டங்கள். அடுத்தடுத்து அடைக்கப்பட்ட நீதிமன்ற கதவுகள். எங்களின் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் வெள்ளைக்காரன் தவறு என்று சொல்லவில்லை, PETAக்காரன் தவறு என்கிறான். தடை பெறுகிறான்.


 

 


வாக்களித்து தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் எல்லாம் மௌன சாமியார்களாக, சீரும் பாம்புகளாக இல்லாமல் நீதிமன்ற கண்டனத்துக்குப் பயந்து, மத்திய மாநில அரசுகளின் கடைக்கண் பார்வைக்காகவும் பொட்டி  பாம்புகளாக பெட்டிக்குள் கிடக்கிறார்கள்.
 
இணையமும் இளையோர் சக்தியும்
 
பொறுத்து பார்த்தான், போராடி பார்த்தான், அவன் கனவு பலிக்கவில்லை. ஆழ்ந்து சிந்தித்தான். இளையோர் தலைமைக்கு வழி விட்டான். இணையம் இளையோர்களின் வசம் ஆனது. களம் தயாரானது. வீதிக்கு வந்தார்கள் எம் தகப்பன் சாமிகள்.
 
மாணவர் சக்தி மகத்தானது. உலகின் பெரும் மாணவப் புரட்சிகளின் வரலாறு எல்லாம் ரத்தால் எழுதப்பட்டு இருக்கும்போது, தரணி பார்க்க, பரணி இல்லாமல், கத்தி இன்றி ரத்தம் இன்றி, ஒரு யுத்தம் நடந்து வருகிறது. அதிரும் அலங்காநல்லூரின் வாடிவாசல் அதன் சாட்சி. 
 
இது வரை உலகில் நடந்த மாணவப் புரட்சிகள் எல்லாம், மொழிக்காக நடந்து இருக்கிறது. அரசின் அடக்குமுறைக்கு எதிராக நடந்து இருக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு எதிராக அரசின் செயல்பாடுகள் அமையும் போது நடந்து இருக்கிறது. மக்களின் உரிமைக்காக நடந்து இருக்கிறது. தற்போது அலங்காநல்லூரில் நடந்து வரும் மாணவ  வாடிவாசல் போராட்டம் கலாச்சார உரிமைக்காக நடந்து வருகிறது. 1989 இல் சீனாவின் தியாங் மென் சதுக்கத்தில் மார்ஸில் சட்டத்திற்கு எதிராக திரண்ட 5 லட்சம் மாணவர்கள் திரண்ட வரலாறுக்கு ஒப்பானது அலங்காநல்லூரின் வாடிவாசல் போராட்டம்.
 
போர்க்குணம் எங்களின் பிறவி குணம்
 
அமெரிக்கா வியட்நாம் யுத்தத்தின் ஆரம்பத்தில் சில வெற்றிகளைப்  பெற்றது. என்று வியட்நாம் மக்கள் யுத்தத்தில் நேரடியாக பங்கு எடுத்தார்களோ அன்றே வியட்நாம் வெற்றி பெற ஆரம்பித்தது விட்டது. ஆயிரக்கணக்கான அமெரிக்கா வீரர்களுக்கு வியட்நாம்மில் சமாதி கட்டப்பட்டது. வியட்நாம் வாசிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல எம் அலங்காநல்லூர் வாசிகள். இந்த வாடி வாசல் வெற்றியின் முடிவு PETA -வுக்கு சமாதியாக இருக்கும். சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காவே, சட்டத்திற்காவோ விதிமுறைகளுக்காகவோ மக்கள் இல்லை என்பதை உச்சநீதிமன்றத்துக்கு அலங்காநல்லூர் வாடிவாசல் நீதியாக சொன்னது. நீதியைப் பற்றி எங்களுக்கு பாடம் சொல்ல நீங்கள் யார்? மார்த் தட்டி சொல்கிறோம்! நாங்கள் மனு நீதி சோழன் பரம்பரை.
 
எங்களின் வீரம் அது என்றும் விலை போகாத ஒன்று. எங்களின் வீரம் எங்களின் பரணில் இல்லை. எங்களின் உள்ளத்தில் உள்ளது. சீறும் காளைகள் எங்களின் பிள்ளைகள். மாடு பிடிக்கும் காளைகள் எங்களின் மரபணுக்கள். இன்று அலங்காநல்லூரில் திரண்ட கூட்டம் தன் இனத்தைக் காக்க புறப்பட்ட மாவீரர்களின் கூட்டம்.  அலங்காநல்லூர் வாடிவாசலில் தடியடியைப் பெற்றுக்கொண்டு இருக்கிறானே அவன் மொழிபோர் தியாகிகளின் வாரிசுகள்.

கொட்டும் பனியிலும் உறக்கம் துறந்து களம் கண்ட மாவீரர்கள் அனைவருமே நவீன காந்தியவாதிகள். 21 மணி நேரம் போராட்ட களத்தை உலகில் வேறு எந்த நாட்டு அரசும் செய்யத் துணியாத ஈனச் செயலை( பிஸ்கட்+ தண்ணீர்+உணவு பொருட்களை தடு செய்யப்பட்ட சம்பவம்)கொடுங்கோலன் நீரோ அரசுக்கு சமமானது. இன்று அதிகாலை கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரும் நாளை உதிக்கும் புதிய தமிழகத்தின் கண்மணிகள் எங்கள் பொன்மணிகள்

இரா .காஜா பந்தா நவாஸ் ,
பேராசிரியர் 
[email protected]


 

வெப்துனியாவைப் படிக்கவும்