2ஜி முறைகேடு: எடுபடுமா இராசாவின் வாதம்?

புதன், 1 ஜூன் 2011 (17:42 IST)
FILE
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் தான் வெளிப்படையாக செயல்பட்டதாகவும், தனது அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் அலுவலகத்தின் நேரடி ஒப்புதலுடனேயே இருந்ததாகவும் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் இராசா நீதிமன்றத்தில் தனக்காக தானே வாதிட்டு உண்மைகளை எடுத்துக் கூற திட்டமிட்டுள்ளார் என்ற செய்தி டெல்லி வட்டாரத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கின் முக்கியக் குற்றவாளியாக மத்திய புலனாய்வுக் கழகத்தால் குற்றஞ்சாற்றப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாக டெல்லி திகார் சிறையில் இருக்கும் ஆ.இராசா, இவ்வழக்கை விசாரித்துவரும் ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தின் முன் தன்னை பிணைய விடுதலை செய்யக்கோரும் மனு மீது தானே வாதாட முன்வந்துள்ளார் என்று அவருடைய வழக்குரைஞர் நண்பர்கள் தெரிவித்துள்ளதாக டெல்லி செய்திகள் தெரிவிக்கின்றன.

வழக்குரைஞரான ஆ.இராசா, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தான் கடைபிடித்த நடைமுறைகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய 18 கடிதங்களை ஆதாரமாகக் காட்டி வாதிட திட்டமிடுகிறார் என்பதே டெல்லியில் பரவியுள்ள அதிர்ச்சி செய்தியாகும்.

FILE
2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை விசாரித்துவரும் ம.பு.க.சிறப்பு நீதிமன்றத்தில் பிணைய விடுதலை கோரி விரைவில் இராசா மனு செய்யவுள்ளார். அப்போது அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தான் கடைபிடித்த வழிமுறைகள் பற்றி பிரதமருக்கு எழுதிய 18 கடிதங்களையும், அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்திற்கும், பிறகு நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜிக்கும் தான் எழுதிய கடிதங்களையும், அதில் தொலைத் தொடர்புத் துறை பின்பற்றிய கொள்கைகளின் அடிப்படையிலேயே தனது நடவடிக்கை அமைந்ததையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, தனது அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஒப்புதலுடனே முன்னெடுக்கப்பட்டது என்பதையும், தனது துறை அதிகாரிகளின் துணையோடும், பெரு நிறுவனங்களுடனும் கூட்டுச் சேர்ந்து சதித்திட்டம் தீட்டி அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கியதாக தனக்கு எதிராக மத்திய புலனாய்வுக் கழகம் கூறியுள்ள குற்றச்சாற்று அடிப்படையற்றது என்பதையும் எடுத்துக் கூறவுள்ளார்.

முதலில் வரும் நிறுவனத்திற்கு முதலில் உரிமம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு, பிறகு முதலில் உரிமத்திற்கான கட்டணத்தைச் செலுத்தும் நிறுவனங்களுக்கு முதலில் உரிமம் என்று மாற்றியதையும், உரிமம் பெறுவதற்கான ஒப்பந்தங்களை அளிக்க வேண்டிய தேதியை ஒரு வாரம் முன்னதாகவே நிர்ணயித்து அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததையும் ‘குற்றம் செய்யும் திட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட குற்ற நடவடிக்கைகள்’ என்று மத்திய புலனாய்வுக் கழகம் இராசா மீது குற்றஞ்சாற்றியிருந்தது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான விண்ணப்ப இறுதி தேதியை 2007ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 25ஆம் தேதிக்கு மாற்றியதையும், இப்போதுள்ள தொலைத் தொடர்பு கொள்கையின் கீழ் அலைக்கற்றை ஒதுக்கீட்டை முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்குவதற்கும் பிரதமரிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்திய பின்னரே செய்யப்பட்டது என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் இராசா தயாராகவுள்ளதாகக் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, அலைக்கற்றை ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்த நிறுவனங்கள் பற்றி அயலுறவு அமைச்சரிடமும் (பிரணாப் முகர்ஜி), இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரிடமும் தான் விவாதித்ததாக இராசா கூறுகிறார். பிரதமருக்கு இராசா எழுதிய கடிதங்கள் அனைத்திற்கும் வருகை உறுதியை மட்டும் பிரதமர் செய்துள்ளார். எனவே தனக்கு எதுவும் தெரியாது என்று டெல்லியில் ஊடக ஆசிரியர்களுக்கு பிரதமர் கூறியது உண்மையில்லை என்றாகிறது. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தான் எடுத்த முடிவுகளுக்கு பிரதமர் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை என்பதே இராசாவின் நிலையாகும்.

இராசா முன்வைக்கப்போகும் வாதங்களில் இருந்து ஒன்று உறுதியாகிறது. அது என்னவெனில், இராசா தன்னிச்சையாக செயல்படவில்லை என்பதும், அவர் எடுத்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் பிரதமர் உட்பட அமைச்சரவையின் ‘மெள’ சம்மதம் இருந்துள்ளது என்பதே.

2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கு இதுவரை சென்றுள்ள பாதை என்பது, இராசாவை மையப்படுத்தியதாகவும், பிரதமருக்கோ அல்லது அமைச்சரவைக்கோ அதில் எந்த தொடர்பும் இல்லை என்பது போன்றே இருந்தது. ஆனால் இராசா திட்டமிட்டுள்ள வாதம் இந்த அடிப்படையை நிச்சயம் நொறுக்கிவிடும் என்பது மட்டுமின்றி, பிரதமர் சார்பாக நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய நிலையும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FILE
இராசா தொடர்ந்து சொல்லிவந்த மற்றொரு விடயமும் இந்த வழக்கின் போக்கை மேலும் சிக்கலாக்கும். அது, தான் கடைபிடித்த கொள்கை அனைத்தும், தனக்கு முன்னால் இருந்த அமைச்சர்கள் கடைபிடித்ததுதான் என்பதே அது. அதாவது தனக்கு முன்னர் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் பின்பற்றிய வழிமுறைகளும், அவர் செய்த அலைக்கற்றை ஒதுக்கீடுகளும் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அது இந்த வழக்கை மேலும் விரிவாக்கும் என்று கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்