நிருபமா ராவின் ‘எதிர்கால’ அறிவுரை!

புதன், 1 செப்டம்பர் 2010 (17:04 IST)
“இனிவரும் சந்ததியினரின் நலத்தை கருத்தில் கொண்டு எதிர்காலத்தை‌ப் பாருங்கள்” என்று ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் அயலுறவுச் செயலர் நிருபமா (மேனன்) ராவ் ‘அறிவுர’ கூறியுள்ளார்.

PTI
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களுக்கும் பிறகு யாழ்ப்பாணத்திற்கும் சென்றுள்ள இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ், யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பிற்குப் பின் அங்கு கூடியிருந்த ‘மக்கள் பிரதிநிதி’களிடம் உரையாற்றிய போது இவ்வாறு கூறியுள்ளார் என்று கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

எதிர்காலத்தைப் பாருங்கள் என்று அறிவுரை கூறியது மட்டுமல்ல, “இலங்கையின் வடக்கிலும், கிழக்கிலும் வாழும் மக்களின் (தமிழர்களின்) நலனிற்கு இந்தியா எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் - அவர்கள் ஈழத் தமிழர்கள் ஆனாலும், மலையகத் தமிழர்கள் ஆனாலும் - எந்த அளவிற்கு அவர்களின் நலனில் இந்தியா ‘அக்கற’ கொண்டுள்ளது என்பதை, மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது அமைதி காத்ததும், பிறகு அவர்களின் உழைப்பால் செழித்த பூமியில் வாழ்ந்த பல இலடசக்கணக்கானவர்களை ‘திரும்பப் பெறுகிறோம்’ என்று கூறி, அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து இன்றுவரை கேட்பாறற்ற அகதிகளாக நடத்திவருவதையும் தமிழகம் கண்ணுற்று வருகிறது.

இன்றுவரை இலங்கைச் சமூகத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகமாகவே அங்கு மலையகத் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவை யாவற்றிற்கும் காரணம் டெல்லி அரசின் ‘அக்கற’யே.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையில் இந்தியாவின் அக்கறை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தமிழர்களை கொன்றொழித்து, இலங்கையை சிங்கள பெளத்த நாடாக்கும் கொள்கை கொண்ட ஜூலியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்தனேயுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டதோடு நின்றுவிடாமல், அந்த சிங்கள இன வெறியர் நடத்திய தமிழின அழிப்பை, அமைதிப் படை என்ற பெயரில் இந்திய இராணுவத்தை அனுப்பி தொடரச் செய்த காருண்யமிக்க தலைவரை பிரதமராக கொண்ட நாடல்லவா இந்தியா!

FILE
அத்தோடு நின்றுவிடாமல், ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி மகிந்த ராஜபக்ச துவக்கிய தமிழின அழிப்புப் போரில் சிறிலங்க அரசிற்கு முழுமையாக ஆதரவளித்து, ராடார்களை கொடுத்ததோடு நிற்காமல், அதனை இயக்கவும் நிபுணர்களை அனுப்பி வைத்து, இராணுவ ஆலோசனை வழங்கி, ‘இலங்கையின் பாதுகாப்பிற்காகவே உதவுகிறோம்’ என்று கூறி இயன்றவரை இரகசியமாக ஆயுதங்களையும் வழங்கி தமிழின அழிப்பை ராஜபக்ச அரசும் படைகளும் முழுமையாக நடத்தி முடிக்க உறுதியுடன் உதவியதே இந்திய அரசு? அது தமிழர்களின் எதிர்காலத்தின் மீதான அக்கறையில்தானோ?

தமிழர்களுக்கு எதிரான போர் உச்ச கட்டத்தில் நடந்தபோது சிறிலங்க அரசு அறிவித்த பாதுகாப்பு வளையத்தில் தஞ்சமடைந்த பல இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை பேரழிவு ஆயுதங்களைக் கொண்டு தாக்கியழித்தபோதும், போதுமான உணவு தராமல் அவர்களை பட்டினிப் போட்டுக் கொன்றபோதும், பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்த மக்களின் எண்ணிக்கை பல இலட்சமாக இருந்தபோது, “வெறும் 50 முதல் 70 ஆயிரம் பேர்தான” என்று சிறிலங்க அரசு சொன்னதை நாடாளுமன்றத்திலேயே அதிகாரப்பூர்வமாக அப்போது அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி கூறி, ராஜபக்சவின் இன அழிப்பிற்கு துணை போனது தமிழின நலனில் கொண்ட அக்கறையால்தானா?

தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க போர் படைகள் இழைத்த குற்றங்களை விசாரிக்க வேண்டும், அதற்குப் பொறுப்பானவர்களை தண்டிக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதனை எதிர்த்து தோற்கடித்ததோடு மட்டும் நின்றுவிடாமல், சிறிலங்காவிற்கு ஆதரவாக ஒரு தீர்மானத்தை ஆதரவு தந்த நிறைவேற்ற உதவியது கூட தமிழர்களின் நலனில் மீது கொண்ட பற்றினாலா?
வன்னி முள்வேளி முகாம்களில் மூன்று இலட்சம் பேர் அடைக்கப்பட்டு, துன்புறுத்தப்படுவதைக் கண்டு உலகமே கொதித்தெழுந்து கண்டித்தபோதும், அதுபற்றி கேள்வி எதுவும் எழுப்பாமல், சிறிலங்க அரசின் இன ஒடுக்கலுக்கு துணை போனது தமிழர்கள் மீது கொண்ட அக்கறையாலா?

FILE
வன்னி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களை உலக நாடுகளின், ஐ.நா.வின் வற்புறுத்தலாலும் அழுத்தத்தாலும் மறு குடியமர்த்தம் செய்யப்பட்ட வரும் நிலையில், அவர்கள் வாழ்ந்த இடத்தில் குடியமர்த்தாமல் வேறு பல இடங்களில் குடியமர்த்தப்படுவதை எதிர்த்து கேள்வி கேட்காதது கூட தமிழர்கள் மீதான அக்கறையில்தானா?

தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் சிங்களர்கள் குடியேற்றம் செய்யப்படுவதையும், ஈழப் பகுதியிலுள்ள நகரங்களை அனைத்தின் மையப் பகுதியிலும் சிங்கள இராணுவத்தின் உயர் பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்கப்படுவதை கண்டுகொள்ளாமையும் தமிழர்களின் எதிர்காலத்தின் மீதான பற்றின் காரணமாகவா?

தமிழினத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், 81 ஆயிரம் பெண்கள் விதவைகளாக வாழ்கின்றனர், பெரும்பாலான குடும்பங்களில் தலைவன் இல்லை, வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற ஆண் இல்லா குடும்பம் ஈழத்தில் எங்கு நோக்கினும் வாழ்கின்றனர். இந்த உண்மைகள் எல்லாம் வெளிவராமல் இருக்கவே பன்னாட்டு விசாரணையை எதிர்த்துக் கொண்டிருக்கிறது ராஜபக்ச அரசு. ஐ.நா. விசாரணைக் குழுவை நாட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறது. ஏனென்று கேட்கவில்லை இந்திய அரசு! தன் பங்கும் வெளிப்பட்டுவிடுமல்லவா?

தங்கள் பூமியும், வாழ்வும் சிங்கள பெளத்த இனவெறி அரசால் அடிமைபடுத்தப்பட்டுள்ள அவலத்திலும், துயரத்திலும் வாழும் ஈழத் தமிழர்களை நோக்கி, எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள், எதிர்காலத்தை பாருங்கள் என்று சொல்லாமல் சொல்வது ஈவிரக்கமற்றக கொடுமையல்லவா?

நிருபமா கூறிய வார்த்தைகளின் பொருள் அதுதானே? ‘இதற்குமேல் ஒன்றும் உங்களால் செய்ய முடியாது, நடந்ததை மறந்துவிட்டு எதிர்காலத்தைப் பாருங்கள’ என்றுதானே பொருள்?

ஈழத் தமிழர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிப் போதிக்க இந்தியா யார்? அந்த நாட்டு மக்கள், தங்களை அடிமைப்படுத்த இராணுவ அடக்குமுறையை தொடர்ந்து ஏவிவிட்ட சிங்கள் பெளத்த இன வெறி அரசை எதிர்த்து நடத்திய விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்க்கை சிதறடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் எழுச்சி பெறாமல் அடக்கி வைக்க தமிழர் பகுதிகளில் இராணுவத்தை கொண்டு ஒரு நிரந்தர அடிமையாட்சி திணிக்கும் நடவடிக்கைகளில் ராஜபக்ச அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்கு உதவவே - தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து அகற்றி, உறவுத் தொடர்பற்ற இடங்களில் குடியமர்த்தவே - 50 ஆயிரம் வீடுகள் கட்டித்தரும் திட்டம். இது தவறு என்றால், போருக்கு முன்னர் அவர்கள் எங்கு வாழ்ந்தனரோ அதே இடத்தில் அவர்களை குடியமர்த்த வேண்டும் என்று இந்திய அரசு திட்டவட்டமாகக் கூறுமா? நிச்சயம் செய்யாது. சிறிலங்க அரசை நோக்கி, “இதைச் செய், அதைச் செயஎன்று நாங்கள் உத்தரவிட மாட்டோம” என்று டெல்லி வந்த சிறிலங்க அரசு சார்பு பத்திரிக்கையாளர்களுக்கு உறுதி கூறிய அன்றைய அயலுறவுச் செயலர்தான் இன்று இந்த நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிற சிவ் சங்கர் மேனன்!

ஆக, நிருபமா கூறியது தமிழர்களின் எதிர்கால நலனில் அக்கறை கொண்ட வார்த்தைகள் அல்ல, இதற்கு மேலும் விடுதலைக் கனவில் இருக்காதீர்கள் என்பதே. இது கூட புரியாதவர்கள் அல்ல ஈழத் தமிழர்கள்.

அடிமையாய் வாழ்வதை விட விடுதலையை நோக்கி போராடிச் சாவதே மேல் என்று முடிவெடுத்த நடந்த விடுதலைப் போராட்டத்திற்கு தங்கள் பிள்ளைகளைக் கொடுத்த தியாக குலம் ஈழத் தமிழர்கள், தங்களுடைய எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளும் வழி வகை தெரிந்தவர்கள். இன்றைக்கு சிதறுண்டு கிடக்கிறது ஈழத் தமிழினம். அது இப்படியே இருந்துவிடாது. விடுதலையுணர்வு அதன் இரத்தத்தில் ஆத்மனில் ஆழமாக பதிந்துள்ளது. அது மீண்டும் உயிர்ப்பெரும். காலத்தில் சுழற்சியில் பலம் பலவீனமாகும், அப்போது விரல் உரலாகும். அந்த நாளில் புதிய வரலாறு வலியின்றி பிறக்கும். இன்றைக்கு இருக்கக்கூடிய தெற்காசிய வல்லாதிக்கங்கள் அன்றைக்கு இருக்காமா என்பதுதான் கேள்வி.

‘அருமை சகோதரிகள்’

“இந்தியாவும் இலங்கையும் சகோதரிகள் போன்றவை” என்று கூறுயுள்ளார் நிருபமா ராவ். இந்து நாளிதழின் கொழும்புச் செய்தியாளர் முரளிதர் ரெட்டிக்கு அளித்த பேட்டியில், ‘இலங்கையிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது” என்றும் கூறியுள்ளார்.

21ஆம் நூற்றாண்டில், இந்த நாகரிக உலகில், சொந்த நாட்டு மக்கள் மீது தனது படைப் பலத்தை முழுமையாக கட்டவிழ்த்து விட்டு ஒரு பெரும் படுகொலையை நிகழ்த்தியுள்ள அரசின் சகோதரி இந்தியா என்று நிருபமா ராவ் கூறுகிறார்! ஒருவேளை அந்த வித்தைகள் எல்லாம் தங்களுக்கும் தேவைப்படுகிறது என்பதை இப்படிக் கூறுகிறாரோ நிருபமா ராவ்?

வெப்துனியாவைப் படிக்கவும்