திருப்பதி உண்டியல் மூலம் 144 கிலோ தங்கம்!

ஞாயிறு, 26 மே 2013 (12:21 IST)
FILE
திருமலையில் சுவாமி ஏழுமலையான் கோயில் உண்டியலில் காணிக்கையாக பெறப்பட்ட தங்கம் 144 கிலோ என்று தேவஸ்தானம் சனிக்கிழமை தெரிவித்தது.

ஏழுமலையானுக்கு கடந்த மே 1-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட தங்கத்தின் மொத்த எடை 144 கிலோவாகும்.

குறுகிய நாள்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளில் இதுவே மிகப்பெரிய காணிக்கை என்றும், இதன் மதிப்பு ரூ.48 கோடி என்றும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஒரு புறம் தங்கம் விலை இறங்குகிறது என்று வாங்கிக் குவிக்கும் மக்கள். மறுபுறம் வேண்டுதலுக்காக காணிக்கையாக தாங்கள் விலை மதிப்பில்லாததாக நினைக்கும் தங்கத்தை ஏழுமையான் உண்டியலில் கொண்டு கொட்டும் மக்கள்!

குந்துமணி தங்கம் கூட இல்லாமல் ஏழை பெண்கள் திருமணம் எவ்வளவு நின்று போகிறது, தடை படுகிறது? அவர்களுக்குக் கொடுத்தால் வெங்கடாஜலபதி என்ன கோவிக்கப் போகிறாரா?

நிறைவேறவேண்டிய, அல்லது நிறைவேறிய காரியத்தின் தன்மையையும் அளவையும் பொறுத்து காணிக்கைகளும் குவியும். தங்கத்தைக் கொண்டு ஒருவர் உண்டியலில் காணிக்கையாகக் கொட்டுகிறார் என்றால் அதைவிட பெரிய வருவாய் எங்கிருந்தோ வரப்போகிறது என்று அர்த்தம் இல்லாவிட்டால் பகவானுக்கு யாராவது பிரதி பலன் பாராமல் தங்கத்தை காணிக்கையாக்குவார்களா?

விவசாயிகள் பலர் மின்சாரம் இல்லாமல், பயிர் செய்ய தண்ணீர் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் பசியும், பஞ்சமும் ஆங்கு ஒரு புறம் தலைவிரித்தாடுகிறது.

நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பான விவசாயம் நசுக்கப்பட்டு கொல்லப்பட்டு வருகிறது.

இந்த நாட்டில் ஐபிஎல் கிரிக்கெட்டிற்கு மக்கள் செலவழிக்கும் பணமும் திருப்பதி உண்டியலில் கொண்டு வந்து கொட்டும் நகை, மற்றும் பணத்தையும் பார்க்கும்போது அந்த ஏடுகுண்டலவாடாதான் பொறுத்தருளவேண்டும் என்றே கூறவேண்டியுள்ளது.

திருப்பதி உண்டியலில் கொண்டு வந்துக் கொட்டப்படும் பணமும், நகையும் உண்மையில் மன வேதனை தருவதாகவே உள்ளது. பயனுள்ள காரியங்களை தாங்களே செய்யவேண்டியதை விடுத்து உண்டியலில் கொட்டி யாருக்குத்தான் என்ன பயன்?

வெப்துனியாவைப் படிக்கவும்