தமிழ் செம்மொழி என்றால் அதற்கு நீதிமன்றத்தில் இடமளிக்க மறுப்பதேன்?

வியாழன், 17 ஜூன் 2010 (18:26 IST)
தமிழ் மொழியை தமிழ்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்க வேண்டு்ம் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞராக செயலாற்றி வரும் 6 வழக்கறிஞர்கள் இன்றுடன் 9 நாட்களாக சாகும் வரை பட்டினிப் போரை நடத்தி வருகின்றனர்.

FILE
மதுரை உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 9ஆம் தேதி தங்களது பட்டினிப் போராட்டத்தை துவக்கிய வழக்கறிஞர்கள் பகத் சிங், நடராசன், இராசேந்திரன், எழிலரசு, பாரதி, இராசா ஆகியோர் முன்வைத்துள்ள ஒரே கோரிக்கை இதுதான்: தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப் பேரவையில் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவேற்றப்ட்ட தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம் இந்திய அரசமைப்பிற்கு உட்பட்டு நிறைவேற்றப்பட்டத் தீர்மானம் என்பது முக்கியமானது. இந்திய அரசமைப்புப் பிரிவு 348, உட்பிரிவு 2இன் படி, “எந்த ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்திலு்ம அந்த மாநிலத்தின் மொழியை (அல்லது ஹிந்தியை) வழக்காடு மொழியாக்க குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் மாநில ஆளுநர் அனுமதியளிக்கலாம” என்று கூறியுள்ளது. எனவே தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றியத் தீர்மானம் ஏதோ தமிழ்நாடு மட்டுமே அப்படிப்பட்ட முன்னெடுப்பை செய்துள்ளது, எனவே அது ஒரு தனித்த அரசமைப்புப் பிரச்சனை என்று கருதுவதற்கு எந்த இடமும் இல்லை.

இவ்வாறு அந்த மாநிலத்தின் மொழியை உயர் நீதிமன்றத்தின் நடைமுறை (வழக்காடு) மொழியாக்க ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே உள்ளது. அதுவே, “உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பயன்பாட்டு மொழி எதுவென்பதையும், எந்த மொழியில் சட்டங்களும், தீர்ப்புகளும் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் 348 பிரிவின் உட்பிரிவு 1இன் படி, நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் சட்ட வரைவுகளும், நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் நிறைவேற்றப்படும் சட்டங்களும், மாநில ஆளுநர்கள் வெளியிடும் பிரகடனங்களும், அரசமைப்பின் கீழ் வெளியிடப்படும் உத்தரவுகளும், விதிகளும், ஒழுங்கமைப்பு உத்தரவுகளும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்” என்பதே. அதாவது உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழோ அல்லது அந்தந்த மாநிலங்களின் மொழியிருந்தாலும் கூட, தீர்ப்புகள் ஆங்கிலத்திலேயே அளிக்கப்பட வேண்டு்ம என்று நிபந்தனை விதிக்கிறது இந்திய அரசமைப்பு.

FILE
இதைத்தான் தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காமைக்கு மத்திய அரசு கூறிய காரணம் என்று தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தீர்ப்பை ஆங்கிலத்தில் எழுத கூடுதல் பணி அதிகமாகும் என்று அக்காரணம் சொல்லப்பட்டதாக தமிழக முதல்வர் கூறுகிறார். உயர் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு தமிழிலும், ஆங்கிலத்திலும் வழங்கத் தேவைப்படும் கூடுதல் பணியாளர்களை நியமிப்பதில் தமிழக அரசிற்கு எந்த சிக்கலும் இல்லை என்று மத்திய அரசிற்கு தமிழக முதல்வர் கடிமெழுதியிருக்கலாமே? தமிழில் தீர்ப்பு கிடைக்க, தங்கள் வழக்கின் தீர்ப்பை வேறொருவர் உதவியின்றி தமிழர்கள் புரிந்துகொள்ள கூடுதல் பணி்ச் செலவை தமிழக அரசு ஏற்கலாமே?

இங்கு ஒரு முக்கியமான நீதிமன்ற நிகழ்வை குறிப்பிடுவது அவசியமாகிறது.

FILE
தனக்கு எதிராக தொடரப்பட்ட வருவாய்க்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கை பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, வழக்கு ஆவணங்களைப் பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அந்த வழக்கின் ஆவணங்கள் அனைத்தையும் தமிழில் தருமாறு ஒரு மனுவை செய்திட, அவருக்கு புரியும் மொழியில் (தமிழில்) மொழியாக்கம் செய்து வழங்குமாறு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அந்த ஆவணங்கள் 4,000 பக்கங்களுக்கு மேல் என்று கூறப்பட்டது. அத்தனை பெரிய வழக்கு ஆவணங்களை மொழியாக்கும் செய்து தர நீதிமன்றம் தயாராக இருக்கும்போது, அதிகபட்சமாக சில நூறு பக்கங்களில் அளிக்கப்படும் தீர்ப்பை மொழியாக்கும் செய்யக் கூடிய அளவிற்கு கூடுதல் பணியாளர்களை ஏன் நியமிக்கக் கூடாது? எனவே, தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க தமிழக முதல்வர் சுட்டுவதைப் போல் பெரும் தடை என்று ஏதுமில்லை.

ஹிந்தி மொழி ஆட்சி மொழியாக உள்ள மாநிலங்களில் உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக ஹிந்தி இருக்கிறது, அங்கெல்லாம் ஆங்கிலத்தில்தானே தீர்ப்பு அளிக்கப்படுகிறது? அதற்கு மட்டும் எப்படி மத்திய அரசு அனுமதி வழங்கியது? இந்தக் கேள்வியை தமிழக முதல்வர் எழுப்பாததேன்?

தமிழ்நாட்டிலுள்ள உரிமையியல், மாவட்ட, மாநகர குற்றவியல் நடுவர் மன்றங்கள், சிறு வழக்கு நீதிமன்றங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியே வழக்காடு மொழியாகவும், தீர்ப்பு தமிழிலும் அளிக்கப்படும் நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை ஏன் தமிழில் வழங்கக்கூடாது என்று மத்திய சட்ட அமைச்சகத்திற்கு தமிழாய்ந்த தமிழ்நாட்டின் முதல்வர் கேள்வி எழுப்பாததேன்?

மொழி தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகார வரையரை என்ன?

நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும், உச்ச, உயர் நீதிமன்றங்களிலும் மொழித் தொடர்பாக அரசமைப்புப் பிரிவு 348, உட்பிரிவு 1இன் படி ஆங்கிலத்திற்கு அளிக்கப்பட்டுள்ள இந்த நிலையை மாற்றக் கூடிய திருத்தங்கள் எதையும் அடுத்த 15 ஆண்டுகளுக்கு செய்யக் கூடாது என்றுதான் அரசமைப்பு பிரிவு 349 கூறுகிறது. மொழித் தொடர்பாக 348 விதிக்கும் (ஆங்கில மொழி பயன்பாடு தொடர்பான) நிபந்தனைகள், சட்டப்படி கூறவேண்டுமெனில் 1965ஆம் ஆண்டோடு காலாவதியாகிவிட்டது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசின் நிர்வாகப் பணிகளில் ஆங்கிலப் பயன்பாட்டை நீக்கி விட்டு ஹிந்தி மொழியை நிர்வாக மொழியாக முழுமையாக கொண்டுவருவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசமைப்புப் பிரிவு 344 வலியுறுத்துகிறது. அது ஹிந்தி மொழிக்கு மட்டுமல்ல, அந்தந்த மாநிலங்களின் மொழிகளுக்கும் பொருந்தக் கூடியதே. எனவே, பிரிவு 348இல் திருத்தம் கொண்டுவருமாறு தமிழக அரசு கோரலாம். தமிழ்நாட்டில் தமிழ் மொழி அரசு மொழியாக உள்ளது, அதையே நீதிமன்ற மொழியாகவும் கொள்ள, நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் அளிக்கவும் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை தாராளமாக வலியுறுத்தலாம்.

இதையெல்லாம் யோசித்து செயல்படாமல், மத்திய அரசு கூறும் நொண்டிச் சாக்கை மட்டும் அறிக்கையாக்கி கொடுப்பது தமிழாய்ந்த தமிழ்நாட்டின் முதல்வரின் தமிழ்ப் பற்றிற்கு உகந்ததல்ல.

தமிழை செம்மொழி என்று ஏற்றுக் கொண்டு அங்கீகரித்த மத்திய அரசு, அதனை நீதிமன்ற மொழியாக பயன்படுத்த அனுமதி மறுப்பது முறையன்று என்று தமிழக முதல்வர் எடுத்துக் கூற வேண்டும். தமிழ் மொழியை நீதி கூறும் மொழியாக்க வேண்டு்ம், அப்படிப்பட்ட நிலைக்கு எல்லா விதத்திலும், ஆங்கிலத்தை விட, தகுதி பெற்றது தமிழ் மொழி. ஆங்கில மொழியில் சட்டம் இருக்கிறது என்றாலும், அதில் உறுதியான சொற்களாக, ஒரு பொருளை மட்டுமே உறுதியாக உணர்த்தக்கூடிய சொற்களாக, பயன்படுத்துவது இலத்தின், கிரீக், ரோமன், ஃபிரெஞ்ச் மொழிகளில் உள்ள சொற்களையே என்பதை ஆங்கிலப் பிரியர்களுக்கு உணர்த்த வேண்டு்ம். இப்படி ஒரு பொருளை மட்டுமே தெளிவாகக் கூறிடக் கூடிய சொற்களை தமிழ் மொழி மிகச் சுலபமாகத் தரும் பலம் கொண்டது என்பதை டெல்லிக்கு உணர்த்த வேண்டு்ம். அதனால்தான் தமிழ் செம்மொழி என்பதை எடுத்துரைக்க வேண்டு்ம். தமிழ் மொழியின் சிறப்பு அதன் தொன்மையிலும், இலக்கிய, இலக்கணத்தில் மட்டுமல்லாது, சொற் பொருட் செரிவிலும் உள்ளதென்பதை டெல்லிக்கு தமிழக முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்.

எனவே, தமிழே சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும், தீர்ப்பு மொழியாகவும் இருக்கும் என்ற அறிவிப்பை செம்மொழி மாநாட்டிற்கு வரும் குடியரசுத் தலைவரை அறிவிக்கச் செய்ய வேண்டும். அதுவே செம்மொழி மாநாட்டிற்கும், அதை நடத்திடும் தமிழக முதல்வருக்கும் சிறப்பைத் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்