சென்னை வங்கி ஏ.டி.எம்.-இல் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது

வியாழன், 1 மார்ச் 2012 (00:07 IST)
சென்னை மேடவாக்கம் கூட்ரோட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம். ஒன்றில் கருவி ஒன்றைப் பொருத்தி வாடிக்கையாளர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் தரவுகளை சேகரித்து பெரிய அளவில் கொள்ளை நடத்த முயற்சி நடைபெற்றுள்ளதை போலீஸ் கண்டுபிடித்து முறியடித்துள்ளது.

வங்கி அட்டைகளின் பின் எண் உள்ளிட்ட தரவுகளை நகல் எடுக்க கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. முதலில் இதனை வங்கி ஊழியர் வெடிகுண்டு என்று நினைத்துள்ளனர்.

திங்கள் கிழமை மாலை ஏ.டி.எம். இருப்பிடத்தை சுத்தம் செய்யவந்த பணிப்பெண் ஏ.டி.எம். கதவுகளைத் திறக்க முடியாமல் திணறியுள்ளார்.

மடிப்பாக்கம் போலீஸ் இது குறித்து கூறுகையில், "வங்கி தொழில் நுட்ப வல்லுனர் ஒருவர் நீண்ட முயற்சிக்குப் பிறகு ஏ.டி.எம். கதவைத் திறந்துள்ளார். கதவுக்குப் பின்புறம் சர்கியூட் போர்டில் சோப்பு டப்பா ஒன்றுடன் செல்போன் ஒன்று இணைத்து வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அவர் அதிர்ந்தார். அவர் இதனை வெடிகுண்டு என்று நினைத்து வங்கி அதிகாரிகளுக்கு தகவல் அனுப்ப விஷயம் எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது" என்றார் மடிப்பாகம் காவல்துறை உதவி ஆணையர் ஆர்.வேதரத்தினம்.

ஏ.டி.எம். அறையில் சோப்பு பெட்டியுடன் ஒரு ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ளதைக் கண்டு பிடித்தோம். அதாவது ஏ.டி.எம்.-இல் நுழைவதற்கே ஒருவர் டெபிட் அல்லது கிரெடிட் அட்டையை நுழைத்துதான் கதவைத் திறக்க முடியும். அதாவது அந்த இடத்திலிருந்தே வங்கி அட்டைகளின் தரவுகளை திருட முயற்சி நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது கதவை ஒருவர் வங்கி அட்டைக் கொண்டு திறக்கும்போது அதன் தரவுகள் செல்போனில் பதிவாகிவிடும்.

இந்த செல்போன் தரவுகளை புளூ டூத் மூலம் மற்றொரு செல்பேசியில் கண்டுவிடுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதாவது இதனைச் செய்த விஷமி ஏ.டி.எம்.இற்கு சற்று தொலைவில் நின்று கொண்டு வங்கி அட்டை தரவுகளை பெற்று கொண்டிருக்கலாம்.

தற்போது ஸ்கிம்மர் கருவியையும், சோப்புப் பெட்டி, செல்போன் ஆகியவற்றை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஏ.டி.எம்.-இல் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை வைத்துப் பார்க்கும்போது சனிக்கிழமையன்று தொப்பி அணிந்த மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம்-இன் கதவருகில் நின்று இந்தவேலைகளைச் செய்தது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு மத்திய குற்றவியல் கிளைக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ.டி.எம். காவலாளிகள் பலர் முறையான பயிற்சி பெற்றவர்களாக இருப்பதில்லை. மேலும் அவர்கள் பலநேரம் ஏ.டி.எம். அறையை விட்டு எங்காவது சென்று விடுவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

சனிக்கிழமை முதல் திங்கள் வரை பலர் அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுத்திருப்பார்கள் எத்தனை பேர் அட்டை விவரங்கள் கொள்ளையன் கையில் சிக்கியுள்ளது என்று தெரியவில்லை. இப்போது கண்டுபிடித்துவிட்டதால் பெரிய அளவில் பணம் கொள்ளை போக வாய்ப்பில்லை என்றாலும் பெரிய மோசடி தவிர்க்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்