ஐடி துறையால் சூடு பிடிக்கும் நில விற்பனை!

புதன், 16 பிப்ரவரி 2011 (17:30 IST)
உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய பொருளாதார மந்த நிலைக்கு பின்னர், தகவல் தொழில் நுட்பம் எனப்படும் ஐடி துறை மீண்டும் தனது பழைய வளர்ச்சியை எட்டிப்பிடிக்க தொடங்கியுள்ளதன் பலன், சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில், குறிப்பாக வர்த்தக மற்றும் பொருளாதார மண்டல கட்டிட மற்றும் நிலங்களின் விற்பனை, கிடுகிடு வளர்ச்சியை எட்டிபிடித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டில் மட்டும் சென்னையில் வர்த்தக கட்டிடங்களுக்காக 3.70 மில்லியன் சதுர அடி அளவிலான நிலம் விற்கப்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 32 விழுக்காடு அதிகமாகும்.

இந்த வளர்ச்சி மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக தெரிவதாக கூறும் சென்னை ரியல் எஸ்டேட் தொழில் புள்ளிகள், 2009 ஆம் ஆண்டை விட 2010 நிச்சயம் தங்களுக்கு முன்னேற்றமான ஆண்டாக அமைந்ததாக கூறுகின்றனர்.

தொடர்ந்து வர்த்தக கட்டிடங்கள் மட்டுமல்லாது, பொருளாதார மண்டலங்களுக்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருவதால்,இந்த வளர்ச்சி இந்த ஆண்டும் தொடரும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதாவது சுமார் 4 மில்லியன் சதுர அடி வரையிலான நிலம் வணிகமயமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவன ஆலோசகர் ஒருவர் கூறுகிறார்.

சென்னையில் ஏற்பட்டுள்ள இந்த வணிகமய கட்டிட வளர்ச்சிக்கு, நாளுக்கு நாள் இந்த நகரில் வந்து குவியும் வங்கிகள் மற்றும் ஐடி நிறுவனங்களுக்கான அலுவலக தேவை அதிகரிப்புதான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

குறிப்பாக நடுத்தரக ரக கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களது அலுவலக இடத்தை நகரின் மையப்பகுதி அல்லது அதனைச் சுற்றி உள்ள இடத்தில் அமைத்துக் கொள்ளவே முன்னுரிமை அளிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க ஐடி மற்றும் ஐடி சேவை நிறுவனங்கள் கிண்டி, பெருங்குடி, மவுண்ட் பூந்தமல்லி சாலை ஆகிய இடங்களில் தங்களது அலுவலங்களை அமைத்துக் கொள்ளவே முக்கியத்துவம் அளிக்கின்றன.

மணப்பாக்கத்தில், மகா பொருளாதார மண்டலம் ஒன்றுக்காக 5.50 லட்சம் சதுர அடி இடம் கைமாறும் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து எல் அண்ட் டி இன்ஃபோடெக் நிறுவனத்திற்கு 2.80 லட்சம் சதுர அடி நிலம் கைமாறும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இவற்றுக்கு அடுத்தபடியாக மற்ற மகா சிறப்பு பொருளாதார மண்டலம் (SEZ) என்று பார்த்தால் டிஎல்எப் ஐடி பூங்காவில் WNS நிறுவனத்திற்கு கைமாறும் 2 லட்சம் சதுர அடி நில ஒப்பந்தம், ஷோஹோ நிறுவனம் வாங்கிய 1.80 லட்சம் சதுர அடி நிலம், பார்க்கலேஸ் வங்கி கையெழுத்திட்டுள்ள ஒரு லட்சம் சதுர அடி நிலத்திற்கான ஒப்பந்தம் என வரிசையாக பட்டியலிடலாம்.

ஐடி நிறுவனங்கள் STPI எனப்படும் இந்திய மென்பொருள் தொழில் நுட்ப பூங்காவில் தங்களது அலுவலகங்களை அமைத்துக் கொள்வதை காட்டிலும்,நகருக்கு வெளியே அல்லது நகரை சுற்றியுள்ள இடங்களில் அமைக்கப்படும் பொருளாதார மண்டலங்களில் இயங்குவதையே விரும்புகின்றன.

அதே சமயம் நகரின் STPI பகுதிகளில் அலுவலகம் அமைப்பதற்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாமல் இல்லை.பேங்க் ஆப் அமெரிக்கா, ஹெச்எஸ்பி ஆகிய வங்கி நிறுவனங்கள் பெருங்குடியில் உள்ள இன்ஃபோசிட்டியில் தலா 2 லட்சம் சதுர அடி நிலத்தை வாங்கும் ஒப்பந்ததில் கையெழுத்திட்டுள்ளன.

அதேப்போன்று ஆர்பிஎஸ் நிறுவனம் 1.60 லட்சம் சதுர அடி நிலத்தை அம்பத்தூரிலும், நோக்கியாசீமென்ஸ் நிறுவனம் 1.10 லட்சம் சதுர அடி நிலத்தை ஓஎம்ஆர் இல் உள்ள பசிபியா ஐடி பூங்காவிலும் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

கிண்டியின் STPI வளாகத்தில் நிலத்தின் விலை ஒரு சதுர அடி ரூ.46 ஆக உள்ளது. அதேசமயம் கிண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சிறப்பு பொருளாதார மண்டலங்களில் சதுர அடி ரூ. 50 முதல் 52 வரை விலை போகிறது.

அதேசமயம் பெருங்குடி STPI வளாகத்தில் ரூ. 33 முதல் 35 வரையும், பெருங்குடிக்கு அப்பால் ரூ. 22 முதல் 25 வரையும் விலைபோகிறது.

இதே வளர்ச்சி தொடர்ந்தால் எதிர்காலத்தில் விலை இன்னும் எகிறும்!

வெப்துனியாவைப் படிக்கவும்