சர்வதேச அளவில் வேகமாக வளரும் பட்டியலில் சென்னை, அகமதாபாத் மற்றும் பெங்களூர் ஆகிய 3 இந்திய நகரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மாநிலங்களிலேயே தொழிற்துறை மற்றும் சந்தைகள் நிறைந்த மாநிலமாக குஜராத் திகழ்வதாகவும், அமெரிக்காவின் பிரபல பிசினஸ் பத்திரிகையான " போப்ஸ்" வர்ணித்துள்ளது.
நியூயார்க், லண்டன், பாரீஸ், ஹாங்காங் அல்லது டோக்கியோ போன்ற ஸ்தாபிதமாகிவிட்ட சர்வதேச மையங்களிலிருந்து தனது பார்வையை திருப்பியுள்ள அப்பத்திரிகை,அடுத்த பத்தாண்டுகளின் நகர சக்திமையங்களாக நியூயார்க்கோ அல்லது மும்பையோ திகழாது என்றும், சீனாவின் சாங்கிங், சானிடிகோ, சிலி மற்றும் ஆஸ்டின், டெக்சாஸ் போன்ற சிறிய நகரங்கள்தான் திகழும் என்றும் கூறியுள்ளது.
உள்ளார்ந்த நகரங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி, புதிய போக்குவரத்து இணைப்புகளை ஏற்படுத்தும் சீனாவின் தைரியமான நடவடிக்கைகளை பாராட்டியுள்ள "போப்ஸ்" இந்தியாவும், திட்டமிடாமலேயே இதேப்போன்ற வளர்ச்சியை கண்டுவருவதாக தெரிவித்துள்ளது.
இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்களைக் கொண்டுள்ள பெங்களூர், அகமதாநாத் ( இந்நகரிலுள்ளவர்வர்களின் தனிநபர் வருமானம், இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ளவர்களை காட்டிலும் இருமடங்கு அதிகமாகும்) மற்றும் சென்னை ( இந்த ஆண்டில் மட்டும் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது) உள்ளிட்ட இந்தியாவின் நகர மையங்கள் அதிகரித்துவருகிறது.இந்தியாவின் முக்கிய தொழில்கள் - ஆட்டோ தயாரிப்பு, மென்பொருள் மற்றும் பொழுதுபோக்கு - இந்த நகரங்களில் தாமாகவே ஸ்தாபித்துக்கொண்டிருக்கின்றன.
இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றின் வளர்ச்சி, சரக்குகளுக்கான சந்தைகள் மற்றும் சேவைகளோடு முதலீடு மூலதனத்தையும் உருவாக்குவதினால், மற்ற நாடுகளையும்,குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில், வளரும் சக்தி நாடுகளாக உருவாக்குவதற்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்துகிறது.
மிகப்பெரிய பெருநகரமாக உள்ள அகமபாத்பாத் நகரைக் கொண்டிருக்கும் குஜராத் மாநிலம்தான், அநேகமாக இந்திய மாநிலங்களிலேயே தொழிற்துறை மற்றும் சந்தைகள் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது. குஜராத் மாநிலத்தின் கொள்கைகள்தான் டாடா நிறுவனத்தின் நானோ கார் தொழிற்சாலையை மேற்கு வங்கத்திலிருந்து அம்மாநிலத்திற்கு வர உதவியது.
அகமதாபாத் நகரின் வளர்ச்சி இந்த அளவுக்கு திகழ்கிறதென்றால், பெங்களூரிலோ கோல்ட்மேன் சாஸ்ச்ஸ், சிஸ்கோ, ஹெச்பி போன்ற பல்வேறு மகா தொழிநுட்ப மற்றும் சேவை நிறுவனங்கள் செயல்படுவதாக புகழாராம் சூட்டியுள்ளது ஃபோப்ஸ்.
அதேப்போன்று இந்த ஆண்டில் மட்டும், டெல்லி மற்றும் மும்பை போன்ற எந்த ஒரு மற்ற பெரிய இந்திய நகரைவிட 1 லட்சம் வேலை வாய்ப்புகளை சென்னை நகர் உருவாக்கி உள்ளதாக கூறும் அப்பத்திரிகை, வளர்ந்து வரும் இந்திய தொழிற்துறையின் முழு ஆதாயத்தையும் தன்னகத்தே சுவீகரித்துக்கொண்டுள்ள சென்னை, டெல், நோக்கியா, மோட்டாரோலா, சாம்சங், சிமென்ஸ், சோனி மற்றும் ஃபாக்ஸான் போன்ற நிறுவனங்களின் வருகையால் மேலும் வளர்ச்சியடைந்து வருவதாகவும், மும்பைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பொழுதுபோக்கு தொழில் துறை நகராக வளர்ந்து வருவதாகவும் பாராட்டியுள்ளது.
இத்தகைய பாராட்டுக்கள் ஒருபுறம் இருந்தாலும், சென்னையின் மக்கள் தொகை வருகிற 2025 ல் 10 மில்லியனுக்கும் அதிகமாகிவிடும் என்று கூறப்படுகிற நிலையில், அதற்கேற்ற உள்கட்டமைப்பு வளர்ச்சிகளை பெற்றால்தான் சென்னையின் இந்த வளர்ச்சியை எதிர்காலத்திலும் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று கூறுகின்றனர் தொழில்துறை வல்லுனர்கள்.