இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் இறங்கிய பங்களாதேஷ் அணி சிறப்பாக விளையாடிய நிலையில், 271 ரன்கள் என்ற ஸ்கோரை பங்களாதேஷ் எட்டி, இந்தியாவுக்கு 272 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
இந்த போட்டியில் கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பாதியிலேயே களத்தில் இருந்து வெளியேறினார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் அவர் பேட்டிங்கின் போதும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்புக்கு சென்ற நிலையில் ஒன்பதாவதாக வீரராக களமிறங்கினார்.
கையில் போடப்பட்ட தையலோடு, கிளவுஸை வெட்டி பேட் செய்த அவர் 28 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடக்கம். ஆனாலும் கடைசி வரை போராடியும் அவரால் இந்திய அணியை வெற்றிப் பெறவைக்க முடியவில்லை. ஆனாலும் அவரின் போராட்ட குணத்தை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.