நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ அணியிடம் படுதோல்வி அடைந்தது குறித்து கேப்டன் ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியின் பிற்பகல் ஆட்டத்தில் லக்னோ அணியும், மும்பை அணியும் மோதிக் கொண்டன.
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்களை குவித்தது. அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 60 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்களே பெற்று தோல்வியடைந்தது.
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ந்து தோல்வி அடைந்து வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தங்கள் தொடர் தோல்வி குறித்து பேசியுள்ள மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா “6 போட்டியில் தோற்று விட்டோம் என்று தலையை தொங்கப்போட்டு சோர்வாக இருக்க மாட்டோம், அடுத்த போட்டியில் மீண்டும் வருவோம்.இனி இதற்கு முன்பு நான் என்ன செய்தேனோ, அதையே மீண்டும் செய்ய போகிறேன். மைதானத்தில் எப்போதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பேன்.
இனிவரும் போட்டிகளிலும் அதையே பின்பற்ற உள்ளேன். அணியின் அனைத்து தோல்விகளுக்கும் நானே முழு பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். இதுபோன்ற தோல்விகளை முன்பும் சந்தித்துள்ளோம். மீண்டும் மீண்டு வருவோம்” என தெரிவித்துள்ளார்.