இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 237 ரன்களில் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, டேரன் சமி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச தீர்மாணித்தது.
இதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 353 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபாரமாக ஆடிய 118 ரன்களும், விருத்திமான் சாஹா 104 ரன்களும் எடுத்தனர். கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுத்தார்.
பின்னர் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில், 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மேற்கொண்டு 23 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலையை அடைந்தது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக பிராத்வைட் 64 ரன்களும், மார்லன் சாமுவேல்ஸ் 48 ரன்களும் எடுத்தனர். அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்குமார் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர், 128 ரன்கள் முன்னிலையோடு இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதிகப்பட்சமாக ரஹானே 78 ரன்களும், ரோஹித் சர்மா 41 ரன்களும் எடுத்தனர்.
இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 345 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி தனது மோசமான இன்னிங்ஸை விளையாடியது. அந்த அணியில் பிராவோ மட்டுமே 59 ரன்கள் எடுத்தார்.
மற்றைய எவரும் 20 ரன்களை தாண்டவில்லை என்பது துரதிர்ஷ்டம். மேலும், 7 வீரர்கள் இரட்டை இலக்கத்தையே தொடவில்லை. இதனால் அந்த அணி 108 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து, இந்திய அணி 237 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.