எழுந்து பின் சரிந்த நியூசிலாந்து: இந்தியாவிற்கு 261 ரன்கள் இலக்கு

புதன், 26 அக்டோபர் 2016 (17:22 IST)
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 260 ரன்கள் எடுத்துள்ளது.
 

 
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 260 ரன்கள் எடுத்தது.
 
முதல் விக்கெட்டுக்கு அந்த அணி 96 ரன்கள் எடுத்திருந்தது. டாம் லாதம் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் கப்திலுடன், கனே வில்லியம்சன் இணைந்தார். இருவரும் இணைந்து 42 ரன்கள் எடுத்தனர். சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கப்தில் 72 ரன்களில் வெளியேறினார்.
 
பின் இணைந்த வில்லியம்சன், ராஸ் டெய்லர் இணையும் 46 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் என்ற வலுவான நிலையில் அந்த அணி இருந்தது. இதனால், 300 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால், அதற்கு பிறகு வந்த வீரர்கள் எவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வெளியேற 260 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா தரப்பில் அமித் மிஸ்ரா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்