இந்திய அணி 309 ரன்கள் குவிப்பு: ரோகித் சர்மா 179 ரன் குவித்து அபாரம்

செவ்வாய், 12 ஜனவரி 2016 (12:55 IST)
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் இன்று நடக்கும் முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அனி 309 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் சர்மா 179 ரன் எடுத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய அணிக்கு 310 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.


 
 
ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி பெர்த்தில் இந்திய நேரப்படி 9 மணிக்கு ஆரம்பித்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
ரோகித் சர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய தவான் 22 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களம் இறங்கிய விராட் கோலி ரோகித் சர்மாவுடன் இணைந்து இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை அருமையாக எதிர்கொண்டு ஆடினர்.
 
36 ரன்னில் இந்தியாவின் முதல் விக்கெட்டை எடுத்த ஆஸ்திரேலிய அணி, ரோகித் சர்மா, கோஹ்லி கூட்டணியை பிரிக்க கடுமையாக போராடியது. ஆனால் இந்த கூட்டணி ஆஸ்திரேலிய அச்சுறுத்தலுக்கு சற்றும் சளைக்காமல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 44.3 வது ஓவரில் அணியின் எண்ணிக்கை 243 ஆக இருக்கும் போது 91 ரன்களுடன் இருந்த விராட் கோஹ்லி ஆட்டமிழந்தார்.
 
இரண்டாவது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி 207 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய கேப்டன் தோனி 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித், தோனி கூட்டணி 43 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
 
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 171 ரன்கள் மற்றும் ஜடேஜா 10 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
 
ஆஸ்திரேலிய அணிக்கு 310 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக இந்தியா அணி எடுத்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்