2 ஆவது டெஸ்ட் போட்டி: முரளி விஜய் அபார சதம் - இந்தியா 4/311

புதன், 17 டிசம்பர் 2014 (09:14 IST)
இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முரளி விஜயயின் அபார சதத்தால் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது.
 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
இந்நிலையில் இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் இன்று (டிச, 17) தொடங்கியது. காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத தோனி, இன்றைய டெஸ்டில் கேப்டனாக செயல்படுவார். மேலும் ஆஸ்திரேலிய கேப்டன் கிளார்க் தசைப்பிடிப்பு காரணமாக தொடரில் பங்கேற்கவில்லை. எனவே ஆஸ்திரேலியா அணியை ஸ்டீவன் சுமித் கேப்டனாக வழிநடத்துகிறார்.
 
மேலும் விக்கெட் கீப்பர் சகா நீக்கப்பட்டார். இந்திய அணியில் அஷ்வின், உமேஷ் யாதவ் ஆகியோர் அணியில் இடம் பெற்றனர்.   முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி தனது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரரான தவான் 24 ரன்களில் வெளியேறினார். நிதானமாக விளையாடிய முரளி விஜய் அரை சதம் அடித்தார்.

பின்னர் இணைந்த புஜாராவும் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட கோலி 19 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தொடர்ந்து அசத்திய முரளி விஜய் டெஸ்ட் அரங்கில் தனது 5 ஆவது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் ரகானேவும் அரை சதத்தை எட்டினார். முரளி விஜய் 144 ரன்கள் எடுத்தபோது ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டு இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்தது. ரகானே 75 ரனகளிளும், ரோகித் சர்மா 26 ரன்களிளும் அவுட்டாகாமல் உள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்