இன்று தரம்சாலாவில் இங்கிலாந்து – வங்கதேசம் மோதல்! – மைதானத்தை குறை கூறும் ஜாஸ் பட்லர்!

செவ்வாய், 10 அக்டோபர் 2023 (09:48 IST)
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இன்று இங்கிலாந்து - வங்கதேச அணிகள் மோத உள்ள நிலையில் மைதானம் சரி இல்லை என்று இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் கூறியுள்ளார்.



ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. 10 அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டிகளில் இந்தியாவின் ஒன்பது மைதானங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று இமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா மைதானத்தில் இங்கிலாந்து வங்கதேச அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி நடைபெறுகிறது.

முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் வங்கதேச அணி வென்று இரண்டு புள்ளிகளை பெற்றுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி இன்னும் தனது வெற்றி கணக்கை தொடங்கவில்லை. இன்று நடைபெறும் இந்தப் போட்டி இங்கிலாந்து அணிக்கு மிகவும் முக்கியமான போட்டியாக உள்ளது.

இந்நிலையில் தரம்சாலா மைதானம் குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில் அவர் “தரம்சாலா மைதானம் மோசமான நிலையில் உள்ளது. ஃபீல்டிங் செய்யும்போது வீரர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இதை நாங்கள் ஒரு காரணமாக சொல்லவில்லை. ஆனால் இது ஒரு அணியாக நாங்கள் விளையாட விரும்பும் இடத்திற்கு இடையூறாக உள்ளது“என்று கூறியுள்ளார்.

ஆரம்பம் முதலே இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகளில் குறைபாடுகள் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். சமீபத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூட இதை ஒரு குற்றச்சாட்டாக வைத்திருந்த நிலையில், ஜாஸ் பட்லர்ரின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்