20 ஓவர் போட்டியின் தோல்விக்கு நான் மட்டுமே காரணம்: தோனி

செவ்வாய், 9 செப்டம்பர் 2014 (13:38 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்ற 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இத்தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என இந்திய கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.
 
இந்தியா - இங்கிலாந்து  இடையேயான 20 ஓவர் போட்டி 7 செப்டம்பர், 2014 அன்று பர்மிங்காமில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன், பேட்டிங்கை தேர்வு செய்தார். 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 180 ரன்கள் எடுத்தது.
 
பின், 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.
 
கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றிக்கு 6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் கேப்டன் தோனி, ராயுடு இருந்தனர். கடைசி ஓவரில் அனைத்து பந்துகளையும் தோனி எதிர்கொண்டார். இதில் 5 ஆவது பந்தில் ஒரு ரன் எடுக்க வாய்ப்பு இருந்தும் தோனி ஓடவில்லை. இதனால் தோல்விக்கு தோனியின் தவறான யுக்தியே காரணம் என்று கூறப்பட்டு வந்தது.
 
இந்நிலையில் இந்திய அணி கேப்டன் தோனி இதுகுறித்து தெரிவித்தபோது,  6 பந்துகளில் 17 ரன்கள் எடுப்பது என்பது கடினமான செயல்தான். முதல் பந்தில் சிக்சர் அடித்தேன். 4 ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினேன். ஆனாலும், கடைசி 2 பந்தை எதிர்கொண்ட போது சற்று நெருக்கடி இருந்தது. பந்து கால் விரலில் உரசியதால் அதிரடியாக அடித்து விளையாட முடியவில்லை.
 
ராயுடு அடித்து ஆடக்கூடிய திறமை கொண்ட வீரர் தான். இருப்பினும் அதிக பந்துகளை எதிர்கொள்ளாத அவர் வந்த உடனே அடித்து விளையாடுவது கடினம் என்று கருதி கடைசி ஓவரில் எல்லா பந்துகளையும் நானே ஆடினேன். ஆனால் நான் நினைத்தபடி நடக்கவில்லை. எனவே இத்தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்