இந்திய அணி டிசம்பர் 17 ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடுகிறது. இதற்காக டிசம்பர் 8 ஆம் தேதி தென்னாப்பிரிக்கா செல்ல இருந்தது. இந்நிலையில் இப்போது தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற ஒமைக்ரான் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அந்த தொடர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது சம்மந்தமாக பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடர் ரத்தாகுமா என்பது பற்றி இப்போதே கூற முடியாது. இதுபற்றி பிசிசிஐ மத்திய அரசுடன் ஆலோசித்த பிறகே வீரர்களை அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் கூறி இருந்தார்.
இந்நிலையில் இப்போதைய தகவலின் படி இந்திய அணி தனி விமானத்தில் தென் ஆப்பிரிக்கா சென்று அங்கு பயோ பபுளில் இருக்க வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் இந்தியா தென் ஆப்பிரிக்கா தொடர் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று மும்பையில் பிசிசிஐ பொதுக்கூட்டம் நடக்கிறது. அதில் இந்திய அணியின் சுற்றுப்பயணம் குறித்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.