பாகிஸ்தான் வீரர் முச்சதம் விளாசி சாதனை: மே.தீவுகள் அணி திணறல்

சனி, 15 அக்டோபர் 2016 (12:04 IST)
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அஷார் அலி முச்சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
 

 
துபாய் சர்வதேச மைதானத்தில் பாகிஸ்தான் - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இரவு-பகல் ஆட்டமாக நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
தொடக்க ஆட்டக்காரர் சமி அஸ்லாம் 90 ரன்களிலும், அற்புதமாக ஆடிய அஷார் அலி முதல்நாள் ஆட்டத்திலேயே சதம் விளாசினார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி 146 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆசாத் சஃபிக் 67 ரன்களிலும் வெளியேறினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அஷார் அலி இரட்டைச் சதம் [19 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] கடந்தார். இதற்கிடையில் பாபர் ஆசம் 69 ரன்களுடன் வெளியேறினார்.
 

 
மேற்கிந்திய தீவுகள் அணியினர் 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியும் அஷார் அலியை வீழ்த்த முடியவில்லை. களத்தில் நிலைத்து ஆடிய அஷார் அலி உணவு இடைவேளைக்கு பிறகு அற்புதமான முச்சதத்தை விளாசினார்.
 
அத்துடன் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டதாக அறிவித்தது. அஷார் அலியின் 302 ரன்களையும் சேர்த்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 579 ரன்கள் குவித்தது. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி தனது முதல் இன்னின்ஸை ஆடி வருகிறது.
 
சிறப்பு:
 
அஷார் அலி விளாசிய முச்சதத்துடன் சேர்த்து இதுவரை பாகிஸ்தான் தரப்பில் இதுவரை நான்கு முச்சதங்கள் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஹனிஃப் முஹமது 337, இன்சாமம் உல்-ஹக் 329, யூனிஸ்கான் 313 ரன்கள் எடுத்திருந்தனர்.
 

 
1992ஆம் ஆண்டிற்குப் பிறகு பாகிஸ்தான் தொடக்க வீரர் ஒருவர் முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் விளாசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிகப்பட்ச ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் அஷார் அலி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 1958ஆம் ஆண்டு ஹனிஃப் முஹமது 337 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்