நியூசிலாந்திடம் மண்ணைக் கவ்வியது ஆஸ்திரேலியா; 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார தோல்வி

புதன், 3 பிப்ரவரி 2016 (16:28 IST)
நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார தோல்வி அடைந்தது.
 

 
நியூசிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின், முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
 
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டு இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது.
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 75 பந்துகளில் [8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] 90 ரன்களும், மெக்கல்லம் 29 பந்துகளில் [5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்] 44 ரன்களும் எடுத்து சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர்.
 
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், ஹென்றி நிக்கோலஸ் 61 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 35 ரன்களும் குவித்து 300 ரன்கள் குவிக்க உதவினர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹசில்வுட், ஃபால்க்னர், மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
பின்னர் கடின இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வருவதும், போவதுமாக அணிவகுப்பு நடத்திக் கொண்டிருந்தனர். இதனால் 41 ரன்களுக்குள் முக்கிய 6 விக்கெட்டுகளை இழந்தது.
 
இதற்கிடையில், மேத்யூ வேட் மற்றும் ஃபால்கனர் இருவரும் அணியை வீழ்ச்சியில் இருந்து தடுத்து நிறுத்த முயன்றனர். இருவரும் இணைந்து 7ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் குவித்தனர். மேத்யூ வேட் மற்றும் ஃபால்க்னர் இருவரும் முறையே 37 மற்றும் 36 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
 
பின்வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற ஆஸ்திரேலியா அணி 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்து 159 ரன்கள் வித்தியாசத்தில் அபார தோல்வி அடைந்தது.
 
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 146 பந்துகளை சந்தித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதுவே, ஆஸ்திரேலியா அணி குறைவான பந்துகளை சந்தித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஒருநாள் போட்டி என்ற மோசமான சாதனையைப் படைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்