ரோகித் சர்மா அதிரடி, ஸ்மித் பதிலடி: வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா

செவ்வாய், 12 ஜனவரி 2016 (16:32 IST)
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

 
ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கிறது. முதல் ஒரு நாள் போட்டி பெர்த்தில் இந்திய நேரப்படி 9 மணிக்கு ஆரம்பித்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
 
முதலில் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு 310 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா 171 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். விராட் கோலி 91 ரன்கள் எடுத்தார்.
 
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 310 ரன்கள் என்ற சற்று கடினமான இலக்கை நோக்கி ஆடியது. ஆரம்பத்திலே ஆரோன் பின்ச் 8 ரன்களுக்கும், வார்னர் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்தாலும் பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்மித் அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டார்.
 
21 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலியா தனது 3 வது விக்கெட்டை அணியின் எண்ணிக்கை 263 ஆக இருக்கும் போது இழந்தது. 3 வது விக்கெட்டுக்கு பெய்லி அவுட் ஆக அந்த கூட்டணி 242 ரன்கள் சேர்த்தது. இறுதியாக அந்த அணி 49.2 வது ஓவரில் 5 விக்கெட்டை இழந்து வெற்றி இலக்கான 310 ரன்களை அடைந்தது.
 
ஸ்மித் 149 ரன்களும், பெய்லி 112 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் பல்பிர்சிங் ஸ்ரன் 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
 
149 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்து சென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்துக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்