4 ஆவது ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?

செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (09:50 IST)
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கான 4 ஆவது ஒரு நாள் போட்டி பர்மிங்காமில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடக்கவுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள், மற்றும் இரண்டு 20 ஓவர் (டி20) போட்டி ஆகியவற்றில் விளையாடுகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 3-1 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்தது.

பின் நடக்க இருந்த முதல் நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. மேலும் இவ்விரு அணிகளுக்கான 2 ஆவது ஒரு நாள் போட்டி 27 ஆகஸ்ட், 2014 அன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து 30 ஆகஸ்ட், 2014 அன்று நாட்டிங்காம் நகரில் நடந்த 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் 2 - 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கான 4 ஆவது ஒரு நாள் போட்டி இன்று (செப்டம்பர் 2, 2014) பர்மிங்காமில் நடக்கவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய அணியைப் பொறுத்தவரை பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் சிறப்பாகவே செயல்படுகின்றனர். மொகித் ஷர்மாவுக்கு பதிலாக உமேஷ்யாதவ் இடம் பிடிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பேட்ஸ்மேன்களில் ஷகீர் தவான், கோலி இருவரும் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். ரெய்னா, ராயுடு, ரஹானே, தோனி ஆகிய பேட்ஸ்மேன்கள் இன்றும் தங்களது திறமைகளை நிரூபித்தால் இந்திய அணி ஒரு நாள் தொடரை வெல்வது நிச்சயம்.

அதேசமயம் இங்கிலாந்து அணி கடந்த போட்டிகளில் அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுக்க அயராது பாடுபடும் என்பது உறுதி.

வெப்துனியாவைப் படிக்கவும்