2015 உலகக் கோப்பைக்குக் 10 அணிகள் மட்டுமே-ஐ.சி.சி. திட்டவட்டம்

செவ்வாய், 5 ஏப்ரல் 2011 (11:24 IST)
2015ஆம் ஆண்டு ஆஸ்ட்ரேலியா, நியூஸீலாந்து இணைந்து நடத்தும் ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு டெஸ்ட் விளையாடும் 10 அணிகளே இடம்பெறும் என்று ஐ.சி.சி. திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

2007ஆம் ஆண்டு, மற்றும் 2011ஆம் ஆண்டு உலகக் கோபை கிரிக்கெட் தொடர்கள் 14 நாடுகளுடன் மிகவும் நீண்ட நாட்கள் நடைபெறுவது குறித்து பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்தன.

ஐ.சி.சி.யின் இந்த முடிவுக்கு அயர்லாந்து நாட்டு கிரிக்கெட் வாரியம் அந்த நாட்டு வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு இது கிரிக்கெட்டிற்கு கறுப்பு நாள் என்று தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் 50 பந்துகளில் சதம் எடுத்த, அதுவும் டெஸ்ட் விளையாடும் பலமான இங்கிலாந்து அணிக்கு எதிராக, அதுவும் 111/5 என்ற நிலையிலிருந்து 330 ரன்களை துரத்திய கெவின் ஓ'பிரையன் சாதனை அவ்வளவுதான். அவர் அடுத்த உலகக் கோப்பையில் விளையாட முடியாது. இது உண்மையில் மிக மோசமான முடிவுதான் என்று அயர்லாந்து கேப்டன் தெரிவித்துள்ளார்.

இதனால் அயர்லாந்து, கனடா, கென்யா, ஜிம்பாப்வே போன்ற நாடுகளை ஆதரிக்கும் ஸ்பான்சர்கள் விலக நேரிடும். அரசு தரப்பு ஆதரவும் குறையும் மேலும் இதனால் ஐ.சி.சி. உறுப்பு நாடுகளின் எண்ணிக்கையில் பெருமளவு குறைய வாய்ப்புள்ளது.

ஏற்கனவே இதனை அறிவித்த போது உலகக் கோப்பை என்பதிலிருந்து உலகம் என்பதை நீக்கி விட்டனர் என்று பலரும் கருத்து கூறியிருந்தமை நினைவு கூறத்தக்கது.

20 ஓவர் சர்வதேச கிரிக்கெட், உலகக் கோப்பை கிரிக்கெட்டில் துணை நாடுகளுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்