20 ஓவர் கிரிகெட்டில் ஊழல் வாய்ப்புள்ளது - இயன் சாப்பல்

திங்கள், 1 நவம்பர் 2010 (13:56 IST)
ஐ.பி.எல். வழியில் தனியார் முதலீடுகளை பெருமளவு ஈர்க்க கிரிக்கெட் ஆஸ்ட்ரேலியா முடிவு செய்திருப்பதையடுத்தும் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஐ.பி.எல். பாணி கிரிக்கெட் தொடரை நடத்தவும் முடிவாகியதையடுத்து இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஊழல் நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என்று முன்னாள் வீரர் இயன் சாப்பல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் ஆஸ்ட்ரேலிய பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவை போல ஆஸ்திரேலியாவும் 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகளை நடத்த உள்ளனர். ஆனால் இந்த போட்டிகள் வியாபார நோக்கத்தில் நடக்கின்றன. வியாபாரிகளை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது. இந்திய தொழில் அதிபர்கள் பலர் முதலீடு செய்கிறார்கள்.

லாப நோக்கம் இல்லாமல் இதில் யாரும் செயல்பட மாட்டார்கள். எனவே ஊழல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. 20 ஓவர் போட்டியில் எளிதாக ஊழல் தொற்றிக் கொள்ளும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது ஊழல் மலிந்து விட்டது. எனவே இதிலும் ஊழல் நடப்பதை தடுக்க தனியார் முதலீடுகள் சரியாக தணிக்கை செய்ய வேண்டும். ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

கிரிக்கெட் உலகில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் வெளிநாட்டில் இருந்து ஊழலை இறக்குமதி செய்யாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

என்று கூறியுள்ளார் இயன் சாப்பல்.

வெப்துனியாவைப் படிக்கவும்