ராஜஸ்தான் ராயலை 147 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது சென்னை கிங்ஸ்

புதன், 4 மே 2011 (17:51 IST)
முதல் விக்கெட்டிற்கு 10 ஓவர்களில் 86 ரன்களைக் குவித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, தனது சிறப்பான பந்து வீச்சைக் கொண்டு கட்டுப்படுத்தி, 147 ரன்களுக்குச் சுருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக் கிரிக்கெட் போட்டியில் பூவா தலையா வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் களமிறங்கியது. ஷென் வாட்சனும், ராகுல் திராவிடும் சிறப்பாக விளையாடி மளமளவென்று ரன்களைக் குவித்தனர்.

மார்க்கலும், போலிங்கரும் சிறப்பாக பந்து வீசியும் விக்கெட்டுகள் விழவில்லை. இந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு வந்தார் தோனி. அவர்களின் பந்து வீச்சை அதிரடியாக அடித்தாடி ரன் எண்ணிக்கையை வேகப்படுத்தினார் ராகுல் திராவிட். 51 பந்துகளை எதிர்கொண்டு 19 பெளண்டரிகளுடன் 66 ரனகள் எடுத்த ஆட்டமிழந்தார் திராவிட்.

வாட்சன் 26 பந்துகளில் 5 பெளண்டரிகளுடன் 32 ரன்களைக் குவித்தார். இவர்கள் இருவரும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கே விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்த ஆட வந்த மெனேரியா, போத்தா ஆகியோரையும் அஸ்வின், ஜகதி வீழ்த்தினர். இடையில் டெய்லர் மட்டும் 20 ரன்களை அடித்தார்.

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய மார்க்கல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

வெப்துனியாவைப் படிக்கவும்