பீட்டர்சன்-பயிற்சியாளர் கருத்து வேறுபாடு முற்றுகிறது

வெள்ளி, 2 ஜனவரி 2009 (17:59 IST)
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கெவின் பீட்டர்சனுக்கும் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸிற்கும் இடையே பனிப்போர் முற்றியுள்ளது. இதனால் இவர்கள் இருவரிடையேயும் பேச்சு வார்த்தைகளை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

பீட்டர் மூர்ஸின் பயிற்சிக் காலக்கட்டத்தில் இங்கிலாந்து அணித் தேர்வு முறைகளில் பீட்டர்சனுக்கும், மூர்ஸிற்கும் இடையே நிறைய முறை கருத்து வேறுபாடுஅகள் ஏற்பட்டதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முத்தாய்ப்பாக சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லும் இங்கிலாந்து அணியில் முன்னாள் அணித் தலைவர் மைக்கேல் வானை தேர்வு செய்யாதது பீட்டர்சனை எரிச்சலையடையச் செய்துள்ளது.

மேலும் ஒரு வீரராக பீட்டர் மூர்சிற்கு அனுபவம் இல்லாததால் பீட்டர்சனுக்கு அவரது திறமைகளின் மீது மரியாதை ஏற்படவில்லை என்றும் பிரிட்டன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

களத்தில் பல தவறுகளை தான் செய்தாலும், பீட்டர் மூர்ஸ் ஒரு பயிற்சியாளராக அவற்றை திருத்த எந்த ஒரு உதவியையும் செய்ய முடியாது என்று பீட்டர்சன் கருதுவதாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தில் கெவின் பீட்டர்சன் தனது 5 மாத கால கேப்டன் பொறுப்பையும் துறக்க தயாராகி விட்டதாக எழுந்த செய்திகளை அடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் மூர்ஸையும், கெவின் பீட்டர்சனையும் அழைத்து சமரச முயற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு இங்கிலாந்து அணியை தொடர்ந்து இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை விளையாடுமாறு திருப்தி அடையச் செய்ததை விட தற்போது அரிதான ஒரு காரியம் செய்ய வேண்டிய நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உள்ளதாக இங்கிலாந்து பத்திரிக்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்