பாண்டிங் சதம்; ஆஸ்ட்ரேலியா 260/6 (50)

வியாழன், 24 மார்ச் 2011 (18:29 IST)
மொடீராவில் நடைபெறும் இந்தியா, ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதியில் முதலில் பேட் செய்த ஆஸ்ட்ரேலியா பிராட் ஹேடினின் அரை சதம், ரிக்கி பாண்டிங்கின் அபார சதம் ஆகியவற்றுடன் 50 ஓவர்களில் சவாலான 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்துள்ளது.

ரிக்கி பாண்டிங் 118 பந்துகளில் 104 ரன்களை எடுத்து கடைசியாக அஷ்வின் பந்தில் அவுட் ஆனார். பவர் பிளேயில் 5 ஓவர்களில் 44 ரன்கள் எடுத்தனர் பான்டிங்கும், டேவிட் ஹஸ்சியும்.

தோனி மாறி மாறி அபாரமாக பந்து வீச்சை மாற்றினார் அதற்கு ஜாகீர் கான் மட்டுமே விக்கெட்டுகளுடன் பதிலளித்தார். ஹர்பஜன் சிங் கடைசி ஓவரில் 13 ரன்களை விட்டுக் கொடுத்தார். விக்கெட்டுகளை எடுப்பதில்லை என்ற சபதம் எடுத்திருப்பார் போலும். 10 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்தார்.

பாண்டிங் சதம் எடுக்கும் முன் ஹர்பஜன் சிங் பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார் ஆனால் நடுவர் நாட் அவுட் என்றார் ரிவீயூ செய்ய தோனியிடம் மீதமில்லை.

43-வது ஓவரில் 199/5 என்று இருந்தது ஆஸ்ட்ரேலியா. அதன் பிறகு டேவிட் ஹஸ்ஸியின் 26 பந்துகள் 38 ரன்களால் உயர்ந்தது. மேலும் பாண்டிங்கும், ஹஸ்ஸியும் 7 ஓவர்களில் 55 ரன்களை 6-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். இதனால் பாண்டிங் விரும்பிய ஸ்கோரை எட்ட முடிந்தது.

தோனி தன்னிடம் உள்ள பலவீனமான பந்து வீச்சிலும் தன்னால் இயன்றதைச் செய்துஇ ஓரளவுக்கு துரத்தும் இலக்கை எட்டுமாறு செய்துள்ளார். இதற்கு உதவி புரிந்தவர்கள் ஜாகீர் கான், யுவ்ராஜ் சிங், ஓரளவுக்கு அஷ்வின்.

இடையில் டெண்டுல்கருக்கு 2 ஓவர்கள் கொடுத்தார். அவர் ரன்களை வழங்காவிட்டாலும் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை.

கோலி ஒரு ஓவர் வீசி 6 ரன்கள் கொடுத்தார். இவையெல்லாமே விக்கெட்டுகளை வீழ்த்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள். பலனளிக்கவில்லை. முனாஃப் படேல் பந்தில் ஒன்றுமேயில்லை. அவர் 7 ஓவர்களில் 44 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

பாண்டிங் சதத்துடன் ஒரு அரைசதம், பின்னால் ஒரு அதிரடி இதனை வைத்துக் கொண்டே 260 ரன்கள் வரை வர முடிகிறது என்றால் இந்தியாவில் ஒருவர் சதம் எடுத்தால் போதுமானது என்று தெரிகிரது.

பிட்ச் ஒரு முனையில் ஸ்பின் எடுக்கிறது. மறு முனையில் பேட்டிங் சுலபம் என்று ஜாகீர் கான் கூறினார்.

இந்தியா இன்னும் சிறிது நேரத்தில் 261 ரன்கள் இலக்கை எதிர்த்துக் களமிறங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்