திராவிட் சதம்: இந்தியா 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

ஞாயிறு, 24 ஜூலை 2011 (10:30 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

3வது நாளான நேற்று இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் முகுந்தும், கம்பீர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். அணி எண்ணிக்கை 63 ரன்கள் எட்டியிருந்த நிலையில், பிராட் பந்தில் கம்பீர் போல்ட் ஆனார். அதன்பிறகு 49 ரன்கள் எடுத்திருந்த முகுந்தும் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு, 100வது சதத்தை எடுப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட சச்சி‌ன், திராவிடுட‌ன் இணை சேர்ந்தனர்.

58 பந்துகளில் 6 பெளண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்திருந்த சச்சின், மீண்டும் பந்து வீச வந்த பிராட்டின் பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

அவ்வளவுதான் ஒரு முனையில் திராவிட் மட்டும் நின்றாட, லஷ்மண் (10), ரெய்னா (0) என்று அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பிறகு தோனியுடன் இணை சேர்ந்தார் திராவிட்.

திராவிடுக்கு துணையான நிதானமாக ஆடி 103 பந்துகள் எதிர்கொண்டு 28 ரன்கள் எடுத்திருந்த தோனி, டிரம்லெட் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பிரவீன் குமார் 17 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் எவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

திராவிட் மட்டும் ஒரு முனையில் ஆட்டமிழக்காமல், 220 பந்துகளை எதிர்கொண்டு 15 பெளண்டரிகளுடன் 103 ரன்கள் எடுத்து இந்திய அணியின் ஃபாலோ ஆனை தவிர்த்தார்.

அதன்பிறகு தனது 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணி 5 ஓவர்களில் 5 ரன்கள் எடுத்து இந்திய அணியை விட 193 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்றைய 4வது நாள் போட்டியில் இங்கிலாந்து அணி மேலும் 200 ரன்கள் குவித்து 400 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்து டிக்ளேர் செய்தால், இறுதி நாளில் இந்திய அணி தோல்வியைத் தவிர்க்க நின்றாட வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்