டன்கன் பிளெட்சரைத் தூக்க வேண்டிய நேரம் வந்து விட்டது - சுனில் கவாஸ்கர்

திங்கள், 10 மார்ச் 2014 (15:25 IST)
FILE
தென் ஆப்பிரிக்கா, நியூசீலாந்து, ஆசியக் கோப்பை கிரிக்கெட் உதைகளுக்குப் பிறகு பயிற்சியாளர் டன்கன் பிளெட்சரை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு எழுதிய பத்தி ஒன்றில் கூறியிருப்பதாவது:

"இந்திய கிரிக்கெட் வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இதனைத் தடுப்பதும் முடியாது போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு இந்திய அணிக்குத் தேவைப்படுவது ஒரு இளம் பயிற்சியாளர். புதிய இளம் பயிற்சியாளரே இந்த இந்திய அணிக்கு புதிய வழிகாட்டுதலையும் புதிய சக்தியையும் அளிக்க முடியும்.

ஒரு இளம் பயிற்சியாளரை (டேரன் லீ மேன்) ஆஸ்ட்ரேலியா கொண்டுவந்தது. பாருங்கள் அந்த அணி குறுகிய காலத்தில் எந்த உயரத்திற்குச் சென்றுள்ளது என்பதை.

சிலர் கூறலாம் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு இன்னும் ஒரு ஆண்டுதான் இருக்கும்போது பயிற்சியாளரை மாற்றுவது உசிதமல்ல என்று. ஆனால் உடனடியாக பயிற்சியாளரை மாற்றவில்லையெனில் இந்திய அணியின் வீழ்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
FILE

முந்தைய பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனிடம் வீரர்களுக்கு ஏகப்பட்ட மரியாதை இருந்தது. ஏனெனில் அவர் இரண்டு கிரிக்கெட் வடிவங்களிலும் இந்திய அணியை சிறப்பாக செயல்படச்செய்தார். பயிற்சிகள் அவரது பார்வையில் ஆரோக்கியமாகவும், போட்டி நிறைந்ததாகவும் இருந்தது. அவர் சென்ற பிறகே இந்திய கிரிக்கெட் நழுவியது... சரிந்தது.

2015 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவேண்டாம் என்று சுனில் கவாஸ்கர் அந்தப் பத்தியில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்