ஜாகீர் அறிவுரை, ஐ.பி.எல்.அனுபவம் கைகொடுத்தது - இஷாந்த் ஷர்மா

வெள்ளி, 1 ஜூலை 2011 (14:52 IST)
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இளம் வீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்திய இஷாந்த் ஷர்மா, தனது எழுச்சிக்கு ஜாகீர் கானின் அறிவுரையும் ஐ.பி.எல். கிரிக்கெட்டும் காரணம் என்று கூறியுள்ளார்.

நேற்று மேற்கிந்திய அணிக்கு எதிராக தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் சிறந்த பந்து வீச்சை வீசி 55 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் இஷாந்த்த் ஷர்மா.

"எனது இந்தக் குறுகிய கிரிக்கெட் வாழ்வில் நான் ஏகப்பட்ட ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு விட்டேன், நீங்கள் வீழ்ச்சியடையும் போது ஒருவரும் உங்களைக் கேட்கமாட்டார்கள்.

நான் ஜாகீர் கானுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவர் எப்போதும் உடல்தகுதி விஷயத்தில் கவனம் அவசியம் என்று வலியுறுத்துவார், ஆனால் அதனை அப்போது உணரவில்லை. ஆனால் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு உடற்தகுதி எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது உணர்ந்து விட்டேன்.

நான் வேறு ஒருவரை காப்பி அடித்து வீச முயன்றேன் அது எனது ரிதம், வேகம் இரண்டையும் கெடுத்து விட்டது. ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் போது என் உடல் ஏன் களைப்படைகிறது எப்படி மீண்டு வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.

நிறைய போட்டிகள் விளையாடியதால் நான் எப்படி என்னை உடற்தகுதி ரீதியாக தயாரித்துக் கொள்ளவேண்டும் என்பதையும் அறிந்தேன். அது உதவிகரமாக அமைந்தது"

இவ்வாறு கூறினார் இஷாந்த் ஷர்மா.

வெப்துனியாவைப் படிக்கவும்